[X] Close

விசா மோசடி: அமெரிக்காவில் இந்தியர்கள் 8 பேர் கைது; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை


indians-arrested-students-detained-in-u-s-on-visa-fraud-charges

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 31 Jan, 2019 12:03 pm
  • அ+ அ-

விசா மோசடி செய்ததாகக் கூறி, இந்தியக் குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் 8 பேர் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில இந்திய மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மிச்சிகன் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அமெரிக்க வழக்கறிஞர் மேத்யூ ஸ்னைடர் தெரிவித்துள்ளார்.

டெட்ராய்ட் பகுதியில் இருந்து 6 இந்தியர்கள், ஃப்ளோரிடா மற்றும் வெர்ஜீனியாவில் இருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் எண்ணிக்கை குறிப்பிடப்படாத அளவு இந்திய மாணவர்கள் விசா மோசடி குற்றத்துக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹோம்லாந்து காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கைதானவர்கள் யார்?

லேக் மேரி பகுதியைச் சேர்ந்த பரத் காக்கிரெட்டி (29) வெர்ஜீனியாவைச் சேர்ந்த சுரேஷ் கண்டாலா (31), கெண்டகியைச் சேர்ந்த பனிதீப் கர்னாதி (35), வடக்கு கரோலினாவைச் சேர்ந்த பிரேம் ரம்பீசா (26), கலிஃபோர்னியாவின் சந்தோஷ் சமா (28), பென்சில்வேனியாவில் இருந்து அவினாஷ் தக்கல்லபள்ளி (28), அட்லாண்டாவைச் சேர்ந்த அஸ்வந்த் நூன் (26), டாலாஸ் பகுதியைச் சேர்ந்த நவீன் ப்ரதிபதி (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரில், அஸ்வந்த் நூன் என்பவர் 25,000 டாலர்கள் அளவுக்கு மோசடி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு மாணவர்கள் 18 பேருக்கு விசா மோசடி செய்ய உதவியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.

இதுகுறித்துப் பேசிய அமெரிக்க வழக்கறிஞர் மேத்யூ ஸ்னைடர், ''சர்வதேச மாணவர்கள் எங்கள் நாட்டின் மதிப்புமிக்க சொத்து என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வழக்கில், சர்வதேச மாணவர்களுக்கான விசா திட்டம் மிகவும் மோசமான முறையில், தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close