[X] Close

முதல் இந்து-அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதில் பெருமையடைகிறேன்: துள்சி கபார்ட்


tulsi-gabbard-us-democratic-president-aspirant-modi-hindu

  • முத்துக்குமார்
  • Posted: 28 Jan, 2019 18:09 pm
  • அ+ அ-

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள இந்திய-அமெரிக்கர் துள்சி கபார்ட்  இந்து-அமெரிக்கராக முதன் முதலில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக களமிறங்குவதில் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தனக்கு எதிராக அமெரிக்க ஊடகங்கள் சில வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார், அதாவது தன்னையும் தன் போன்ற இந்துப் பெயர் உள்ள ஆதரவாளர்களையும் ‘இந்து தேசியவாதி’ என்று விஷமப் பிரச்சாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரிலிஜியஸ் நியூஸ் சர்வீஸில் தலையங்கம் எழுதியுள்ள அவர் தன் மீதும் தன் ஆதரவாளர்கள் மீதும் ஆதாரமற்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 11ம் தேதி இவர் 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். தன்னை இந்து-அமெரிக்கர் என்பதற்காக இந்து தேசியவாதி என்று பிரச்சாரம் செய்பவர்கள் நாளை முஸ்லிம் அல்லது யூத-அமெரிக்கர்களுக்கும் ஜப்பானிய, ஸ்பானிய அல்லது ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கும் இதைச் செய்வார்கள் என்றார்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு:

“இந்தியாவின் ஜனநாயக ரீதியாகத் தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடியை நான் சந்தித்ததை வைத்து என் மீது சந்தேகங்களை எழுப்பும் விதமாக பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், டோனால்ட் ட்ரம்ப் மற்றும் என் சகாக்கள் பலரும் மோயைச் சந்தித்துள்ளனர். 

முதல் இந்து-அமெரிக்கராக நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் பெருமையடைகிறேன். முதல் இந்து-அமெரிக்கராக காங்கிரஸில் தேர்வு செய்யப்பட்டதற்கும் பெருமையடைகிறேன்.

வரலாற்றில் முதல் முறை என்று என் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் அறிவிப்பை தலைப்புச் செய்திகளில் கொண்டாடியிருக்கலாம். ஆனால் என் மீது மதரீதியான காழ்ப்புடன் என்னையும் என் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் செய்தி பரப்புகின்றனர். என் நாட்டுக்கான (அமெரிக்கா) என் கடமை உணர்வை சந்தேகிப்பவர்கள், பிற இந்துவல்லாத தலைவர்களை கேள்வி கேட்பதில்லை, இந்த இரண்டக நிலை ஏன், இதற்கு ஒரு பெயர்தான் உண்டு அது “மதக் காழ்ப்புணர்ச்சி” ஆகும், என்றார்.

இவர் 2012 -ல் காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட போது பதவிப்பிரமாணத்தை பகவத் கீதையின் மீது உறுதி மொழி எடுக்கும் முடிவை எடுத்தார். இதற்கு காரணமாக அவர் கூறிய போது, “இராக் போரின் போது மத்திய கிழக்கில் நான் நாட்டுக்காக பணியாற்றிய போது பகவத் கீதைதான் எனக்கு ஆன்மீக நிம்மதியை அளித்தது” என்றார். இதனையடுத்து  குடியரசுக் கட்சியினர் இவரை கடுமையாகத் தாக்கிப் பேசினர், குறிப்பாக இவர் சார்ந்த இந்து மதத்தைக் குறிப்பிட்டு தாக்கிப் பேசினர்.

இந்நிலையில் அவர் மேலும் எழுதியபோது, “இந்துக்களுக்கு எதிரான உணர்வை வளர்த்தெடுப்பவர்கள் அரசியலில் மதக்காழ்ப்பைக் கொண்டு வருகின்றனர். ஒருவருக்கு சார்பாகவோ, எதிராகவோ வாக்களிக்க நிறம், இனம், மதம், பாலினம் ஆகியவற்றை இழுப்பது அமெரிக்க வழிமுறை அல்ல.” என்ற கபார்ட் கடந்த செப்டம்பரில் சிகாகோவில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் தலைமையேற்க அழைக்கப்பட்ட போது போகாமல் மறுத்தார், அப்போது அவர் கூறிய காரணம் விஸ்வ இந்து பரிஷத்துக்கு நெருக்கமானவர்களாக இந்த மாநாட்டின் முக்கிய அங்கத்தினர் உள்ளனர், அவர்களுடன் தனக்கு கருத்து வேறுபாடு உண்டு என்று நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close