[X] Close

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம்: இந்திய பெண் கமலா ஹாரிஸுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி நிதி குவிந்தது


indian-woman-kamala-harris

கமலா ஹாரிஸ் - REUTERS

  • kamadenu
  • Posted: 24 Jan, 2019 10:16 am
  • அ+ அ-

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் (54) அறிவித்துள்ளார். தற்போது ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரீஸ், அதிபர் டொனால்டு ட்ரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவர் ஆவார். குறிப்பாக, ட்ரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்சிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கமலா ஹாரீஸ் கடந்த 21-ம் தேதிஅறிவித்தார். இதன்மூலம் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பவர்கள் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராக கமலா ஹாரீஸ் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிடப் போவதாக விருப்பம் தெரிவித்த 24 மணி நேரத்தில், அவரது தேர்தல் பிரச்சாரத்துக்காக 38 ஆயிரம் பேர் ரூ.10.6 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். இந்தத் தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஹாரிஸ், நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸின் தாயார் சியாமளா, சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close