[X] Close

தப்பி வந்த சவுதி இளம் பெண்ணுக்கு கனடா அடைக்கலம் 


saudi-teen-fleeing-family-granted-asylum-in-canada

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jan, 2019 10:35 am
  • அ+ அ-

சவுதியிலிருந்து தப்பிவந்த இளம் பெண் ரஹாப் மொகமது அல் குனான்க்கு கனடா அரசு அடைக்கலம் அளித்திருக்கிறது.

இது தொடர்பாக தாய்லாந்து நாட்டின் குடியுரிமை வாரியத் தலைவர் சுராசதே ஹக்பார்ன் கூறும்போது, "ரஹாப் அவர் விரும்பியபடியே கனடா செல்கிறார். இந்தக் கதை இங்கே முடிகிறது. டொரன்டோ வழியாக செல்லும் விமானத்தில் அவர் சென்றிருக்கிறார். அவர் இங்கிருந்து புறப்படும்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார். உற்சாகமாக இருந்தார். அவர் முகத்தில் புன்னகை ததும்பியது" என்றார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, "சவுதி இளம் பெண்ணை கனடா அகதியாக ஏற்றுக் கொள்கிறது. கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பேணுவதில் துணை நிற்கும். உலகம் முழுவதும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும். ஐ.நா. சபை எங்களிடம் இது குறித்து கோரிக்கை விடுத்தபோது நாங்கள் ரஹாபை ஏற்றுக்கொள்வதாகக் கூறினோம்" என்றார்.

யார் இந்த ரஹாப் மொகமது அல் குனான்?
ரஹாஃப் மொகமது அல் குனான் (18) குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். தனது குடும்பத்தினர் தன்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்து இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

ஆனால், சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்து அவரின் பயண ஆவணங்களைப் பிடுங்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், ''குவைத்துக்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர்.  இதை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கேட்கிறேன். தாய்லாந்து  காவல்துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு இறைஞ்சிக் கேட்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

இதனை ஏஎஃப்பி செய்தி நிறுவனமும்  உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின்  தந்தை அப்பெண்ணை திரும்ப அனுப்பி வைக்கும்படி கூறியிருந்த நிலையில்  இந்த விவகாரத்தில்”புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது” ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் ரஹாப் எந்த நாட்டில் புகலிடம் காண்பார் என்பது இழுபறியில் இருந்த நிலையில் தற்போது அவர் கனடா சென்றிருப்பது உறுதியாகியிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close