[X] Close

உலக வங்கித் தலைவர் பதவியிலிருந்து ஜிம் யோங் கிம் திடீர் விலகல்: ட்ரம்ப் தலையீட்டினால் அதிருப்தியா?


world-bank

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 15:12 pm
  • அ+ அ-

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்கு முன்னரே பதவி விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். ஜனவரி 31  வரை அன்று அவர் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

உலக வங்கியின் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதாக மற்ற நாடுகள் குற்றச்சாட்டுகள் எழுப்பிவரும் நிலையில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் உலக வங்கிக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட மற்ற நாடுகள், வங்கியின் தற்போதைய நிலையைப் பற்றி விமர்சனம் செய்து வருகின்றன.  இந்நிலையில் ஜிம் யோங் கிம்மின் திடீர் ராஜினாமா உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நாடுகளின் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் உலகம் முழுவதும் கடன் தருவதற்கான மிகப்பெரிய அரசு நிதியாதாரமாக செயல்பட்டு வரும் இவ்வங்கி வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலக வங்கியில் அமெரிக்க மிகப்பெரிய பங்குதாரராக விளங்குகிறது.

இந்நிலையில், கிம் உலக வங்கிப் பதவியிலிருந்து புறப்படுவது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை அவரது சொந்த விருப்பத்தில் உலக வங்கிப் பதவியில் புதியதாக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கும்.

உலக வங்கியின் 12வது தலைவர் பொறுப்புக்கு வந்த கிம், தன் பதவிக்காலத்தில் சிரிய அகதிகளின் நெருக்கடிகளை சமாளிப்பது, டிரம்ப் நிர்வாகத் தலையீடு உள்ளிட்ட நிறைய நெருக்கடிகளை சந்தித்துவிட்டார். 

பழமை வாய்ந்த டார்ட்மவுத் ஆய்வுக் கல்லூரியின் தலைவராக விளங்கிய கிம்'மை 2012ல்தான் அமெரிக்க அதிபர் ஒபாமா உலக வங்கியின் தலைவராக முதன்முதலில் அமர வைத்தார். மீண்டும் 2016ல் ஒபமா அவரையே உலக வங்கி தலைவராக பணியைத் தொடர பரிந்துரைத்தார். இந்தமுறை பதவிக் காலம் வரும் 2022 ஜூன் 30 வரை உள்ளது.

'கிம்' தனது ராஜினாமாவில் தெரிவித்துள்ளதாவது:

குறிப்பிடத்தக்க ஒரு நிறுவனமாகத் திகழும் உலகவங்கியின் தலைவராக பணியாற்றியது ஒரு பெரும் கௌரவம் என்று எண்ணுகிறேன். இந்நிறுவனத்தில், நான் மட்டுமின்றி நம் வாழ்நாளில் காணும் மோசமான வறுமை நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் தொண்டுப்பணியில் உணர்வுப்பூர்வமான தனிநபர்களின் அர்ப்பணிப்பு முக்கியமானது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

எனக்கு புதிய சவால்களை எடுத்துக்கொள்ளும் நேரம் இதுவே என்று நான் முடிவு செய்துவிட்டேன். அவ்வகையில் மக்கள் பணிகளுக்கு பயன்படும் வகையிலாக தனியார் நிதிகளை வழங்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளவே இப்பதவியிலிருந்து விலகுகிறேன்.

வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிப்பதில் செயல்பட்டுவரும் ஒரு அமைப்பில் நான் இணைகிறேன். அதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன். இந்த அமைப்பு ஏழை நாடுகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பே நானும் சிலரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு நிறுவனம் ஆகும்.

இவ்வாறு கிம் தெரிவித்துள்ளார்.

கிம்முக்கு அடுத்து அவரது இடத்தை நிரப்புவது தொடர்பாக உலக வங்கியின் இயக்குநர்கள் குழு முடிவு செய்யும். கிம் விடைபெறுவதை அடுத்து அவரது இடத்தில் தற்காலிகமாக தற்போது உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா, நியமிக்கப்படுவதாகவும் உடனடியாக கிம் இடத்திற்கு ஒரு நிரந்தர தலைவரை அமர்த்தும் பணியைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இரண்டாவது உலகப்போர் முடிவடையும்போது உலக வங்கி தொடங்கப்பட்டது. இதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்தனர். இதன் சகோதரி நிறுவனமான சர்வதேச நாணய நிதியம், செயல்பட்டு வருகிறது. பொருளாதார சிக்கலில் தவிக்கும் நாடுகளுக்கு அவசரக் கடன் ஐஎம்எப் வழங்கி உதவிகள் செய்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close