[X] Close

விமானப் பணிப்பெண்ணான மகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட தந்தை செய்த சுவாரஸ்யம்


flight

  • kamadenu
  • Posted: 28 Dec, 2018 14:27 pm
  • அ+ அ-

உறவுகள் அழகானவை. அதிலும் அப்பா - மகள் உறவு அதீத அழகு. விமானப் பணிப்பெண்ணான தனது மகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட அப்பா செய்த நெகிழ்ச்சியான செயல்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் ஒஹியொ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹால் வாகன். இவரின் செல்ல மகள் பியர்ஸ் வாகன். இருவரும் கிறிஸ்துமஸ் நாளை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். விமான பணிப்பெண்ணான பியர்ஸ், திடீரென கிறிஸ்துமஸ் அன்று வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மகளைப் பிரியாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் ஹால். மகள் பணிபுரியும் அனைத்து விமானங்களிலும் உடன் செல்ல முடிவெடுத்தார். உடனடியாக நாடு முழுவதிலும் பியர்ஸ் பயணிக்கும் அனைத்து விமானங்களிலும் முன்பதிவு செய்தார். மகளுடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து 6 விமானங்களில் பயணித்தார்.

ஒரு விமானப் பயணத்தின்போது உடன் வந்த மைக் லெவி என்னும் விற்பனைப் பிரதிநிதி, இந்தத் தகவலை ஹாலிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார். இந்த நெகிழ்ச்சியான செயலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். அந்தப் பதிவை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்தனர். 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்தனர்.

இதே பதிவைப் பகிர்ந்த மகள் பியர்ஸ், தந்தைக்கும் தனது சக ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பகிர்வுக்குப் பதிலளித்த நெட்டிசன்கள் பலர், இது ''ஒரு தந்தை தனது மகளுக்கு அளித்த அற்புதமான கிறிஸ்துமஸ் பரிசு'' என்று நெகிழ்ந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close