[X] Close
 

இவர்தான் பாகிஸ்தான் ஊடகத்துறையின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் 


meet-the-first-ever-transgender-news-anchor-from-pakistan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Mar, 2018 11:21 am
  • அ+ அ-

பாகிஸ்தான் உள்ளூர் செய்தி சேனல் ஒன்று திருநங்கை ஒருவரை செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தி நாட்டிலேயே திருநங்கைக்கு வாய்ப்பளித்த முதல் ஊடகம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. 
கோஹினூர் செய்தி என்ற அந்த சேனல், மார்வியா மாலிக் என்ற திருநங்கையை தங்கள் சேனலில் செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தியதை அறிவித்துள்ளது. 
மார்வியா மாலிக் ஊடகவியலில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது முதுகலை படித்துவருகிறார். 
இதுதவிர மாடலிங்கிலும் அவருக்கு விருப்பம் இருக்கிறது. அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் பேஷன் டிசைன் கவுன்சிலின் ஃபேஷன் வாக்கில் நடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 
தனது ஊடகப் பணி குறித்து மார்வியா மாலிக் கூறும்போது, "என்னைப் போன்ற திருநங்கைகள் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன். எனது மக்களுக்கு உத்வேகம் அளிக்க விரும்புகிறேன். எங்குச் சென்றாலும், ஒரு திருநங்கையை அனைவரும் இழிவாகவேப் பார்க்கின்றனர். திருநங்கையாக இருப்பதில் எங்கள் தவறு ஏதும் இல்லையே. நாங்கள் படித்து பட்டம் பெற்றாலும்கூட எங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதைத்தான் நான் மாற்ற விரும்புகிறேன். ஃபேஷன் துறையில் தனி முத்திரை பதித்ததுபோல் ஊடகத்துறையிலும் எனக்கென ஓர் இடத்தை உருவாக்க விரும்புகிறேன். 
பாகிஸ்தான் அரசு திருநங்கைகளுக்கு என்று வாக்குறுதிகளை அள்ளிவிட்டது. ஆனால், எங்களுக்கென்று ஏதும் செய்யவில்லை" என்றார். 
தனக்குப் பணி வழங்கிய கோஹினூர் சேனல் குறித்து கூறும்போது, "என்னை நேர்காணலுக்கு அழைத்த நாளன்றே எனக்குப் பணியும் வழங்கிவிட்டனர். என்னைப் போன்ற திருநங்கைகளைச் சமூகத்தில் கவுரவமான இடத்தில் அமர வைப்பது தங்கள் இலக்கு என்றனர். மூன்று மாதங்கள் செய்தி வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. என்னுடன் அனைவருமே அன்பாகப் பழகினர். எனக்கு நான் வீட்டில் இருப்பதுபோலவே இருக்கிறது. இங்குள்ள அனைவரையும் நான் என் குடும்பத்தினராகக் கருதுகிறேன். ஆனால், நான் பிறந்த குடும்பமோ என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டது" என்றார்.

- ஏஎன்ஐ



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close