[X] Close
 

மரணத்தின் பிடியில் 12.4 கோடி பேர்: பட்டினியில் செத்துக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்


12-4

கோப்புப் படம்

  • ஜனார்த்தன பெருமாள்
  • Posted: 24 Mar, 2018 15:30 pm
  • அ+ அ-

உலகம் முழுவதும் உணவு கிடைக்காமல் பட்டினியில் எந்த நேரத்திலும் உயிரிழக்கும் சூழலில் 12.4 கோடி பேர் சிக்கி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

பஞ்சம், உள்நாட்டு போர் போன்ற காரணங்களால் உலகின் பல நாடுகளில் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். சோமாலியா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் பஞ்சத்தால் மக்கள் உயிரிழக்கின்றனர். அதேசமயம், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு போரால் உணவுக்கு மக்கள் தவிக்கும் சூழல் உள்ளது.

இந்த நாடுகளில், தனியொரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 4 லிட்டருக்கும் குறைவான நீரும், 2,100 கிலோ கலோரிக்கும் குறைவான உணவு மட்டுமே கிடைத்தால், ஐ.நா சபை கணக்கீட்டின்படி, பஞ்சம் நிலவும் பகுதியாகும். ஆனால் பல நாடுகளில் இந்த வரையறைக்கும் குறைவாகவே மக்களுக்கு உணவும் , தண்ணீரும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில்  பஞ்சம் மற்றும் வன்முறையால் மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கி தவிப்பது அதிகரித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. பட்டினியால் தவித்து வரும் 12.4 கோடி பேர் எந்நேரத்திலும் உயிரிழக்கும் சூழல் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா உணவு பிரிவு தலைவர் டேவிட் பியாஸ்லி கூறியதாவது:

உலகம் முழுவதுமே பலவித காரணங்களால் ஏராளமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர். உணவுக்காக பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன, வன்முறையும் நடக்கின்றன. உள்நாட்டு போர், தீவிரவாதம் உள்ளிட்டவையும் இதற்கு காரணங்களாக உள்ளன.

குறிப்பாக சோமாலியா, ஏமன், தெற்கு சூடான், வட கிழக்கு நைஜிரியா போன்ற நாடுகளில் மட்டுமே உணவின்றி 3.2 கோடி மக்கள் தவித்து வருகின்றனர். மோதலும், பசியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டுமே அழிவை ஏற்படுத்துபவை. வன்முறையால் பட்டினி ஏற்பட்டது; பின் பட்டினியால் வன்முறை வெடித்து கிளம்புகிறது. எப்போது உணவு கிடைக்கும் என தெரியாமல் இந்த பகுதிகளில் மக்கள் தவிக்கின்றனர். இந்த நாடுகளில் உள்ள மொத்தம் 81.5 கோடி மக்களில், 60 சதவீதம் பேர் உணவுக்காக போராடும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோலவே பட்டினி சூழல் பற்றி ஐ.நா மனிதநேய தலைவர் மார்க் லோகுக் கூறியதாவது:

உலகம் முழுவதும் பஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஐ.நாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து வருகிறது. பல நாடுகளில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது. இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் மக்கள் உணவுக்காக தவிக்கும் நிலை உள்ளது. இதற்கு அந்த நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போரே காரணம்.

இதுமட்டுமின்றி சில ஆப்ரிக்க நாடுகளிலும் மிக மோசமான அளவில் ஊட்டச் சத்து பற்றாக்குறையுடன் 49.0 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் குழந்தைகள். போதிய சத்துள்ள உணவு கிடைக்காமல் இவர்கள் அவதிப்படுகின்றனர். சூழியியல், உணவு பொருட்கள் விலையேற்றம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற காலநிலை பாதிப்பு போன்றவைகளால் சரி விகித உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது.

இந்த பாதிப்பு அதிகமாக ஆப்ரிக்க நாடுகளில் நிலவுகிறது. அதிகஅளவு கனிம வளமும், இயற்கை ஆதாரங்களும் உள்ள போதிலும், ஆப்ரிக்க மக்கள் உணவுக்கு கூட போராடும் சூழல் உள்ளது’’ எனக் கூறினார்.

 

 

[X] Close