[X] Close

பயணங்களும் பாதைகளும்: 3- சொர்கமே என்றாலும்...


payanangalum-paathaikalum

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Apr, 2018 14:42 pm
  • அ+ அ-

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால் இரண்டு நாடுகளிலும் உள்ள கலாச்சார வேற்றுமை பளிச்சென்று தெளிவாகத் தெரியும். அமெரிக்காவில் ஓர் இடத்திற்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் நம் இடம் போய் சேர்வதற்குள் நம் கழுத்திற்கு தேவையான காலை பயிற்சி முடிந்து லேசாக வலி கூட எடுக்கத்தொடங்கி விடும் தலை ஆட்டலினால்.

போவோர் வருவோர் என்று ஹாய், குட் டே, ஹவ் ஆர் யூ...என்று பேசாமல் தாண்டிச்செல்ல மாட்டார்கள். ஐரோப்பிய நாடுகளில் இதற்கு நேர் எதிர். தலை ஆட்டி கை ஆட்டி....நாம் எது செய்தாலும் நாம் இருப்பதாகவே அவர்கள் உணர மாட்டார்கள்.

இப்படிப்பட்ட ஓர் நாட்டில் , ஒரு வீட்டுச் சொந்தக்காரரால் வந்த பிரச்சனையைக்கேட்டால்.....வாடகை வீட்டின் அசவுகர்யங்கள் இந்தியாவில் மட்டுமல்ல என்பது புரியும்.

நான் தங்கியிருந்த வீட்டின் எதிர் வீட்டில் இந்தியன் ஐடி கம்பனியின் ஐரோப்பா கிளையில் வேலைபார்க்கும் கணவன், மனைவி, ஒரு மகன் மற்றும் புதிதாகப்பிறந்த குழந்தை. ஜெர்மனியில் இந்தியர்களைப்பார்பது அவ்வளவு சுலபம் அல்ல. வெகு சிலரே இங்கேயும் அங்கேயும் முகம் காட்டுவார். இவர்களை நாம் அழுத்திப்பிடித்து வைத்துக்கொள்ளவில்லை என்றால் பேச்சுத்துணைக்கு ஒருவரும் இருக்கமாட்டார்.

குழந்தை அப்போதுதான் பிறந்திருந்ததால் பார்த்துக்கொள்ள அந்தப் பையனின் அம்மா இந்தியாவிலிருந்து வந்திருந்தார். அந்த ப்ளாட்டில் நாங்கள் இருவர் மட்டுமே இந்தியர்கள். வீட்டின் கேர்டேக்கர் ஒரு ஜெர்மனி மாது. சரியான நாய் பித்து. மூன்று நாய்கள் படைசூழ ஒரு பாட்சா வாக் வீட்டைச்சுற்றி வந்து இது செய்யக்கூடாது அது செய்வது தவறு என்று நோட் புக் வைத்துக்கொண்டு மெயின்டனன்ஸ் சார்ஜஸ் அதிகம் செய்வதற்கு அலைந்துகொண்டிருப்பார்.

ஜெர்மனியில் வீட்டை வாடகைக்கு லீசில் கொடுக்கும்போதே மிகவும் தெளிவாக நிபந்தனைகள் போடப்பட்டுவிடும்.
ப்ளாட் என்று சொன்னாலும் அந்த வீடு ஒரு தனி வீடு போல் சுற்றிலும் தோட்டம் கார் பார்கிற்கு இடம் என்று மிகவும் அழகாக இருக்கும். வீட்டின் பின் பக்கத்தில் துணி உலர்த்துவதற்கு தனியாக வாங்கி வைக்கப்பட்ட அதி பெரிய கம்பி ஸ்டாண்ட் ஒன்றும் இருக்கும். ஆனால் அந்தக்கொடி கார்டேக்கரின் உபயோகத்திற்கு மட்டுமே.
குடி இருப்பவர்களுக்கு அண்டர் கிரவுண்டில் பெரியதாகக் கட்டப்பட்ட ஒரு ரூம் தனியே உண்டு. ஆனால் இந்த வெளியே வைக்கப்பட்டுள்ள துணிக்கம்பி பாதி பொழுது காலியாகவே இருக்கும். பையன் மாட்டுப் பெண் இருவரும் வேலைக்குச் சென்றபின் குழந்தையின் பாட்டி எப்போதோ அடிக்கும் வெயில் வீணாகப்போகக் கூடாதென்று குழந்தை துணிகளை அங்கே காயப்போடத் தொடங்கினார்.

இதற்காகவே காத்துக்கொண்டிருந்த அந்த கேர்டேக்கர் , வெளியில் வந்து காச் மூச் என்று ஜெர்மன் மொழியில் சத்தம்போட, அவருக்குப்புரியாத தமிழ் மொழியில் இவர் சத்தம் போட , ஒன்றும் செய்ய முடியாமல் ஆங்கிலத்தில் நான் சமாதானப்படுத்த..... ஒரு வழியாக அன்று பிரச்சனை அவர் மகன் வீடு வந்ததும் முடிந்தது. ஏண்டா.. குழந்தை துணிகள் வெயில் பட வேண்டாமோ.... என்ற அவர் குரல் எடுபடாமல் போய்விட்டது.
ஆனால் அன்று தொடங்கியது கேர்டேக்கர் ஜெர்மனுடன் தகராறு. அவர் மகன் இரவு வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து , வந்த உடன் நாய் படை சூழ அவரிடம் ஏதோ ஒரு குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்படும்.

இவை எல்லாவற்றிற்கும் ஹைலைட்....
மாலை வேளைகளில் பாட்டிதான் புதிய குழந்தையை ப்ராமில் வைத்துத்தள்ளிக்கொண்டு போய் வீட்டிலிருந்து சற்றே தூரத்தில் உள்ள முதல் பேரனின் பள்ளிக்குச் சென்று அவனை ரயிலில் அழைத்துவரவேண்டும்.
அன்று அப்படி அழைத்து வரும்போது பெரிய பையன் ஏதோ பிடித்து இழுக்கக் கீழே விழப்போன பாட்டி லேசாக முதுகில் ஒரு தட்டு தட்டி இருக்கிறார். அதே ரயிலில் சில சீட்டுக்களுக்கு முன் அமர்ந்திருந்த அந்த கேர்டேக்கர் ஜெர்மன் அதைப் பார்த்துவிட்டார். 
இது போதாதென்று, வீட்டுக்கு வந்த உடன், முதல் பேரன் வேறு காரணங்களுக்குப்படுத்த, ஒரு பனிஷ்மெண்டாக வாசலில் நிற்க வைத்துவிட்டார்.

இவை எல்லாம் முடிந்து ஒரு பத்து நிமிடத்திற்குள் வீட்டின் வாசலில் ஜெர்மனி போலீஸ். அவர்கள் வீட்டின் கதவைத்தட்டி உஷ் புஷ் என்று ஏதோ கேட்க, அவசரமாக வந்த கார்டேக்கர் ஜெர்மன் தலையை ஆட்டி கைகளை நீட்டிப் பாட்டியைப்பார்த்து ஏதோ சொல்ல....ஆஜானுபாகுவான ஒரு ஜெர்மன் பெண் போலீஸ் பாட்டியை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
நடுவில் நான் கேட்ட ஆங்கிலக் கேள்விகளுக்கு அரைகுறை ஆங்கிலத்தில் வந்த பதிலில் நான் புரிந்துகொண்டது, அமெரிக்காவில் 911 போல் ஜெர்மன் சட்டப்படி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் சட்டப்படி, குழந்தைகளை அடிப்பது, வெளியே நிற்க வைப்பது போன்றவை சட்டப்படிக் குற்றம். அதன் கீழ் அந்த கேர்டேக்கர் ஜெர்மனிப் பெண் புகார் கொடுக்க, பாவம் அந்தப் பாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அதற்குப்பின் அவர் மகன் சென்று கெஞ்சிக்கூத்தாடி ரிலீஸ் செய்து அழைத்துவந்தார்.

பாவம், பாட்டி பேரனை லேசா ரெண்டு தட்டு தட்டினால் சிறையா... ? இந்த எண்ணத்தைத் தாங்க முடியாமல் , கேர்டேக்கர் ஜெர்மனின் சாதனைப்போக்கையும் காணப்பிடிக்காமல் அடுத்த வாரமே இந்தியா கிளம்பி வந்துவிட்டார்.
ஆக....சொர்கமே என்றாலும்....அது நம் நாட்டைப்போல் ஆகுமா...!!!!

லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close