[X] Close
 

கடவுளின் தேசத்தை தேடி..!


a-journey-to-gods-own-country

  • Team
  • Posted: 01 Mar, 2018 06:20 am
  • அ+ அ-

காடுகளை அழிக்காமல் பழங்குடியின மக்கள் எப்படி மகிழ்ச்சியாக, எளிமையாக வாழ்கிறார்கள் என்பதை அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று பார்க்கும் பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு கிடைக்கும். ஆனால் மதுரையைச் சேர்ந்த களரி அமைப்பினர் அந்தக் குறையை போக்குகின்றனர். ஆண்டுதோறும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு காடுகளுக்குள் பழங்குடி மக்களைத் தேடிச் செல்கின்றனர்.

ஒரு சுற்றுலா செல்லும் அனுபவம் என்பதாக மட்டும் இந்த பயணத்தை எடுத்துவிட முடியாது. இதன் நோக்கம் உன்னதமானது. காட்டுக்குள் வசிக்கும் பழங்குடியினருடன் தங்கி அவர்களுடைய வாழ்வியலையும், வேளாண்மையையும், அறிவியலையும், கலாச்சாரத்தையும் கற்று அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த பயணம். காடுகளுக்குள்ளேயே அடங்கிப்போகவிருந்த பழங்குடி மக்களைப்பற்றிய வரலாற்றை, அரிய தகவல்களை எதிர்கால தலைமுறையினருக்கும் கடத்துவதுதான் இந்த பயணத்தின் நோக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகள் என 40 பேரை அழைத்துக் கொண்டு கர்நாடகா மாநிலம் குடகு மலையில் உயரமான தடியண்ட மோல் சிகரத்தில் அமைந்துள்ள யவகபாடி மலைக் கிராமத்துக்கு பயணம் சென்றது களரி குழு.

சுற்றிலும் அடர்ந்த காடுகள், அச்சுறுத்தும் விலங்குகள், மரங்கள், பசுமை போர்த்திய புல்வெளிகள், காட்டாறுகள், அருவிகள் நடுவில் அமைந்த தடியண்டமோல் சிகரம் கர்நாடகாவில் கடவுளின் தேசமாக கருதப்படுகிறது. அங்கு வசிக்கும் ‘மலைக்குடியா’ சமூக மக்களுடன் 4 நாட்கள் தங்கி அவர்களுடன் உறவாடி, மகிழ்ந்து திரும்பியுள்ளனர்.

இந்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்கிறார் களரி அமைப்பின் யோகேஷ் கார்த்திக்.

‘‘1956-ம் ஆண்டுக்கு முன் கர்நாடகாவின் இந்த குடகு மலை சென்னை மாகாணத்தில்தான் இருந்தது. அதனால்தான் என்னவோ இந்த மலைக்குடியா பழங்குடி மக்கள் தமிழ், கன்னடம், மலையாளம் கலந்த குடவா மொழியைப் பேசுகிறார்கள். அதனால் குடவா திராவிட மொழியாகவும் இந்த மொழி பேசும் இந்த மக்கள் திராவிட பழங்குடியின மக்களாகவும் கருதப்படுகிறார்கள்.

வீட்டுக்குள் நுழைந்தால் ‘மலைக்குடியா’ மக்கள் வயதில் மூத்தவர்கள் காலைத் தொட்டு கும்பிடுகிறார்கள். மனிதர்களை ஆண், பெண் பாகுபாடில்லாமல் பார்க்கிறார்கள். விலங்குகளையும், அதன் நடமாட்டத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வாழும் கலையை கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களிடம் உரையாடல் அற்புதமாக இருக்கிறது. மனைவியிடமும், பெற்றோரிடம், குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும். நாம் மற்றவர் களுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறமோ அதை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இப்படி இந்த ‘மலைக்குடியா’ பழங்குடியின மக்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது.

ஒருவருக்வொருவர் கதைகளை சொல்கின்றனர். நலம் விசாரிக்கின்றனர். மரத்தோடு செடிகளோடு பேசுகிறார்கள். இயற்கையை விட்டு பிரிந்து செல்லும்போதுதான் மனிதனுக்கு எதிர்மறை சிந்தனைகள் ஏற்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி பணத்தால் இல்லை. வாழும் முறையில் இருக்கிறது என்பதை இந்த மக்கள் வாழ்ந்து உணர்த்துகின்றனர்.

ஆனால், இவர்களை முன்னேறாதவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள் என்று பொதுவான மதிப்பீடு நிலவுகிறது. மனித சமூகத்தில் தற்போது பணம் இருந்தால்போதும். நான்கு சுவற்றுக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். அது தவறு என்பது இந்த மக்களை சந்திக்கிறபோது புரிகிறது’’ என்றார்.

 

சமத்துவத்தின் அடையாளம்

பழங்குடியின மக்களுக்கான சமூக செயற்பாட்டாளர் லீலாவதி கூறும்போது, ‘‘இந்த மலைக்குடியா பழங்குடியின மக்கள் எந்த ஒரு முடிவுகளையும் ஜனநாய அடிப்படையில் எடுப்பவர்கள். கல்யாணம், திருவிழா முதல் ஊர் பிரச்சனை வரை வட்டவடிவில் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கிறார்கள். வட்டமாக அமர்ந்து முடிவெடுப்பது சமத்துவத்துக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த மக்களிடம் வரதட்சனை கிடையாது. எந்த வீட்டுக்கும் கதவு கிடையாது. ஆனால் திருட்டு இல்லை.

இவை எல்லாமே முன்பு நம்முடைய கிராமங்களில் இருந்தவைதான். ஆனால், நாம் மாறிவிட்டோம். ஊரில் தாய், தகப்பன் இறந்துவிட்டால் அவர்கள் குழந்தையை ஊரே பார்த்துக் கொள்கிறது. எது கிடைத்தாலும் பகிருதல் அவர்களிடம் இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அவர்கள் வீட்டு ஆண்கள் சமைக்கிறார்கள். துணி துவைக்கிறார்கள். வீட்டை பெருக்குகிறார்கள்.

எல்லோருக்கும் வீடு கட்ட தெரியும். பிரசவம் பார்க்கவும் தெரிகிறது. மருத்துவமும் அவர்களே பார்க்கிறார்கள். இந்த வேலையை ஆண்கள்தான், பெண்கள்தான் செய்ய வேண்டும் என்ற முறை அவர்களிடம் இல்லை ’’ என்றார்.

[X] Close