[X] Close

துணைவேந்தர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் காலி: நிர்வாகச் சிக்கலில் தவிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்


administration-problems-in-bharathiyar-univ

  • kamadenu
  • Posted: 26 Aug, 2018 09:51 am
  • அ+ அ-

த.சத்தியசீலன்

கோவை

துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாகச் சிக்கலில் தவிக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 112 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை 110052 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பல்கலைக்கழகத்திலுள்ள 39 துறைகளில் 2 ஆயிரம் பேர் படிக்கின்றனர். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படிக்கின்றனர். இந்நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்யும் முக்கியப் பதவிகளான துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

முழு அதிகாரம் இல்லை

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கோவை மண்டலச் செயலர் ப.ரமேஷ் கூறியதாவது:

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணிபுரிந்த பேராசிரியர் ஆ.கணபதி மீது தொடரப்பட்ட லஞ்ச வழக்கை அடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, உயர் கல்வித் துறை செயலராக இருந்த சுனில் பாலிவால் தலைமையில், பேராசிரியர்கள் டி.திருநாவுக்கரசு, ஜெயக்குமார் ஆகியோரைக் கொண்டு துணைவேந்தர் குழு அமைக்கப்பட்டது. முன்னதாக, பதிவாளராகப் பணிபுரிந்த செந்தில்வாசன் மீது எழுந்த மோசடி புகார்களால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, பேராசிரியர் மோகன் நியமிக்கப்பட்டார். சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த மோகன், அப்பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பொறுப்பு பதிவாளராக பி.வனிதா நியமிக்கப்பட்டார். தேர்வாணையராகப் பணிபுரிந்த கிளாடிஸ் லீமாரோஸ் கடந்த மே மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, பொறுப்பு தேர்வாணையராக விஜயராகவன் நியமிக்கப்பட்டார். தொலைதூரக் கல்வி இயக்குநராகப் பணிபுரிந்த மதிவாணன் மீது எழுந்த புகாரால், அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு பொறுப்பு இயக்குநராக பேராசிரியர் தாமஸ் நியமிக்கப்பட்டார்.

முழு அதிகாரம் இல்லாத பொறுப்பு அலுவலர்களால் கொள்கை முடிவுகளை எடுக்க முடிவதில்லை. ஒவ்வொரு முடிவும், சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டியே எடுக்கப்படுகிறது.

மேற்கண்ட பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர் கல்விக்கு பாதிப்பு

கல்வியாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது:

பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, ஓரிரு மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டம் பெற உள்ளனர். துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர் மூவரும் கையொப்பமிட்டு வழங்கினால் மட்டுமே அப்பட்டம் செல்லுபடியாகும்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய நிர்வாகப் பதவிகள் அனைத்தும் காலியாகவே இருப்பதால், பொறுப்பில் இருப்பவர்கள் கையொப்பமிடும் பட்டங்கள் செல்லுபடியாகுமா? என்று, பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்கு முன்பாக தமிழக அரசின் உயர் கல்வித் துறை விளக்கம் அளித்து, மாணவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விரைவில் நிரப்பப்படும்

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் பி.திருநாவுக்கரசு கூறியதாவது:

துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஆ.கணபதியின் பதவிக் காலம் 2019 மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.

அதுவரை துணைவேந்தர் பணியிடத்தை நிரப்புவதற்கு வாய்ப்பில்லை. கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் பதிவாளர், தேர்வாணையர், மக்கள் தொடர்பு அலுவலர், தொலைதூரக் கல்விக் கூட இயக்குநர் உள்ளிட்ட 8 பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு 45 நாட்கள் அவகாசம் தேவை என்று தேர்வாணையர் அலுவலகத்தில் இருந்து கேட்டுக் கொண்டுள்ளனர். அதை கணக்கிட்டு, பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்படும். பட்டங்களில் துணைவேந்தருக்கு பதிலாக யார் கையொப்பமிடுவது என்று விரிவான ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close