[X] Close

டிவிஎஸ் வேணு சீனிவாசன் மீதான வழக்கு; உண்மைக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைகிறதோ? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி


ponradhakrishnan-tweets-about-tvs-venu-srinivasan-case

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 12 Aug, 2018 12:34 pm
  • அ+ அ-

டிவிஎஸ் வேணு சீனிவாசன் மீதான வழக்கு, சிலை கடத்தல் வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியோ? என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலை கடத்தல் விசாரணையைச் சிபிஐக்கு மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராகச் சேர்த்திருந்தார். எந்த அடிப்படையில் அவரைச் சேர்த்துள்ளீர்கள் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, மயிலாப்பூர் கோயில் சிலை மாயமான வழக்கில் மயிலாப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் சேர்த்ததாகத் தெரிவித்தார்.

சிலை கடத்தல் விசாரணையில் டிவிஎஸ் குழுமத் தலைவர் சேர்க்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கோயில்களில் நடைபெறும் சிலை திருட்டுக் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிப்பதும் ,தண்டிப்பதும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள்  நடவாமல் தடுப்பதும் மிக மிக முக்கியமான ஒன்று. எந்த ஒரு வழக்கிலும் உண்மை குற்றவாளிகளை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை உண்மை குற்றவாளிகளுக்கு வசதியானதாகவும் வழக்கைத் திசைதிருப்பும் ஒன்றாகவும் அமைந்து விடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீரங்கம் கோயில் பிரச்சனை சம்பந்தமாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் என்பதும் முக்கியமான ஒன்று . ஸ்ரீரங்கம் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் திரு. வேணு சீனிவாசன் அவர்களைப் பற்றி பொதுவாக மக்களின் கருத்து பல ஆலயங்களின் மேம்பாட்டிற்காகவும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் பல கோடி ரூபாய்களை எந்தப் பிரதிபலனும் கருதாமல் செலவு செய்து கொண்டிருப்பவர் என்பதாகும்.

தற்போது அப்படிப்பட்ட ஒருவரையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டி இருப்பது உண்மைக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைகிறதோ? அல்லது வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியோ? எனப் பக்தர்களைக் கருத வைத்துள்ளது. எனவே இவ்வழக்கை நேர்மையான, ஒரு சார்பற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கருதும் பல கோடி பக்தர்களில் நானும் ஒருவனாக இதனை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close