[X] Close

கூட்டத்தில் சிக்கிய ராகுல்: கோட்டைவிட்டதா போலீஸ்?- அதிருப்தியில் எஸ்பிஜி


security-lapse-at-rajaji-hall-left-rahul-gandhi-exposed

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Aug, 2018 10:39 am
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கடந்த புதன்கிழமை (8-ம் தேதி) சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது குறித்து ஸ்பெஷல் புரொட்டக்‌ஷன் குரூப் (எஸ்பிஜி) எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

பிரதமர், முன்னாள் பிரதமர் அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே எஸ்பிஜி. 

கடந்த புதன்கிழமை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தர் ராகுல் காந்தி கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த மேடை அருகே செல்ல படியில் ஏறியபோது திடீரென அவர் எஸ்பிஜி குழு அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்திலிருந்து விடுபட்டார். படியில் முந்தியடித்துக் கொண்டு ஏறிய பொதுமக்களுடன் அவர் சிக்கிக் கொண்டார். 
இது குறித்து எஸ்பிஜி அதிகாரிகள் உடனே காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க ராகுல் காந்தி விமான நிலையம் திரும்பும்போது கூடுதல் பாதுகாப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

இது குறித்து தி இந்துவுக்கு விளக்கிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "ராஜாஜி அரங்கில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டது குறித்து எஸ்பிஜி அதிகாரிகள் எங்களுக்குத் தெரியப்படுத்தினர். விஐபிக்களுடன் பொதுமக்கள் சில நிமிடங்கள் சென்றது எப்படி என்பது குறித்து அவர்களுக்கு விளக்கினோம்.

ராஜாஜி அரங்கின் படிக்கட்டுகள் வழியாக விஐபிக்கள், தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வந்துசெல்ல ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், பிரதமர் வந்து சென்ற பின்னால் மக்கள் கூட்டமாக தடுப்புவேலிகளை தகர்த்துக்கொண்டு படிகளில் குவிந்தனர். அவர்களைக் கலைக்க சிறிய அளவில் தடியடிகூட நடத்தினோம்.

சிறிது நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்தது. எஸ்பிஜி அதிகாரிகளுக்கு எங்களுக்கும் இடையே ஏற்பட்ட தகவல் இடைவெளிதான் இந்த குழப்பத்துக்கு காரணம். ராகுல் காந்தி வருகை எங்களுக்கு உறுதியாக தெரிந்தபோதும் அவர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நிமிடம் முதல் ராஜாஜி அரங்கம் வரும்வரையில் நிமிடத்துக்கு நிமிடம் தகவல் கிடைக்கவில்லை. ராகுல் காந்தி ராஜாஜி அரங்கத்துக்குள் இறங்குவதற்கு முன்னதாக எஸ்பிஜி அதிகாரிகள் எங்களிடம் க்ளியரன்ஸ் அனுமதி பெற்றிருந்தால் இந்த குழப்பமே ஏற்பட்டிருக்காது" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close