[X] Close
 

கருணாநிதியின் மனம் கவர்ந்த வேலிட்டி 69 பேனா!


karunanidhi-and-his-love-for-the-fountain-pen

  • பாரதி
  • Posted: 09 Aug, 2018 15:45 pm
  • அ+ அ-

1942-ல் முரசொலியை நிறுவிய நாள் தொட்டே கருணாநிதிக்கு மை ஊற்றும் பேனாவுக்குமான பந்தம் தொடங்கிவிட்டது. ஒரு எழுத்தாளராக வசனகர்த்தாவாக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவராக கருணாநிதியுடன் இணைந்தே இருந்தது பேனா.

2001 ஜூலை 30 அதிகாலையில் கோபாலபுரத்தில் அரங்கேறிய அந்த கைது நாடகத்தின்போதுகூட கருணாநிதி தனது சட்டைப்பையில் மறக்காமல் பேனாவை செருகிக் கொண்டார்.

கருணாநிதியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் அவர் அந்தப் பேனாவை எங்கிருந்து வாங்குவார் என்பது. சென்னை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் இருக்கிறது ஜெம் அண்ட் கோ கடை. அங்குதான் கருணாநிதி எப்போதும் பேனா வாங்குவார்.

அவரது விருப்ப பிராண்ட் வேலிட்டி 69 (Wality 69). நீண்ட காலமாக வேலிட்டி 69 தான் அவருக்கு விருப்பமான பேனாவாக இருந்தது. 1969-ல் கருணாநிதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றபோது தலைமைச்செயலக ஊழியர்கள்தான் அவருக்குப் பிடித்தமான இந்தப் பேனாவை வாங்கி வருவார்களாம்.

ஜெம் அண்ட் கோ நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை முதலாளியான பிரதாப் குமார் கூறும்போது, "எங்கள் கடைக்குவரும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் மு.க.வின் பேனா கிடைக்குமா என்றுதான் கேட்பார்கள்" என்றார்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.ராமசாமி, "பேனாவில் எழுத கலைஞருக்கு அலாதி விருப்பம். அதிகாலையில் எழுதத் தொடங்கிவிடுவார். அப்போதுதான் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பதாலா எனத் தெரியவில்லை. அவர் எழுதி முடிக்கும்போது மணி 6 அடிக்கும். அவரது உதவியாளர் சண்முகநாதனும் வந்துவிடுவார்" என்றார்.

திமுக செய்தித்தொடர்பாளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, "உடன்பிறப்பே என்று அவர் எழுதும் தொடக்கமும் மு.க. என்று முடிவில் அவர் எழுதும் கையொப்பமும் அவருக்கு பேனாவால் எழுதுவது என்பது எவ்வளவு பிரியமானது என்பதைக் கூறும். 

அவரது கையெழுத்து தெளிவாக அழகாக இருக்கும். அடித்தலோ திருத்தமோ இருக்காது. ஆரம்ப நாட்களில் மு.கருணாநிதி என முழுப் பெயரையும் கையெழுத்திட்டு வந்தார். பின்னாளில் தனது கையெழுத்தை மு.க என மாற்றிக்கொண்டார்.
1940 வரை தனது பெயரை எம்.கருணாநிதி என்றுதான் ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் மு.கருணாநிதி (Mu. Karunanidhi) என மாற்றிக் கொண்டார்.

கார்ட்டூனும் வரைவார்..
கருணாநிதி முரசொலி நாளிதழில் கார்ட்டூன் வரைந்திருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். திருநெல்வேலி இடைத்தேர்தலின்போது கருணாநிதி தான் வரைந்த கார்ட்டூனை வைகோவிடம் சென்னைக்கு அவசரமாகக் கொடுத்தனுப்பினார்.

அரசியல்வாதிகளுக்கு கேள்வி பதில் மூலம் தொண்டர்களுக்குச் சென்றடையும் பழக்கத்தை ஏற்படுத்தித் தந்த முன்னோடியே கருணாநிதிதான். முரசொலியில் கரிகாலன் என்ற பெயரில் அவர் எழுதிய கரிகாலன் பதில்கள் மிகவும் பிரபலமானவை. 

இப்படி வெகு ஆண்டுகளாக வேலிட்டி 69 மை பேனாவில் தன் எழுத்தாற்றலை வெளிப்படுத்திய கலைஞர் பெரிய உருண்டையான பேனாக்களை கையாள்வது கடினமானபோதுதான் பந்துமுனை பேனாவிற்கு மாறினார்.

-டெனிஸ் எஸ் ஜேசுதாசன்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close