[X] Close

மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தியை அசரவைத்த கருணாநிதியின் பேச்சு


how-karunanidhi-outwitted-morarji-desai-cs-indira-gandhi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Aug, 2018 14:11 pm
  • அ+ அ-

சொல்வன்மையும் பேச்சாற்றலும் திமுக தலைவர் கருணாநிதியின் அடையாளங்கள். சட்டப்பேரவையிலும் பொதுக்கூட்டங்களிலும் தலைவர்களுடன் பேசும்போதும் கருணாநிதி தனது பேச்சாற்றலை துரிதமாக பதிலளிக்கும் திறமை வாயிலாக பளிச்சிட செய்வார்.

அப்படியான சில சுவாரஸ்ய பேச்சுகளின் தொகுப்பு:

1969-ல் முதல்வராக பதவியேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்திருந்த நிலையில் கருணாநிதி தமிழகத்துக்கு பஞ்ச நிவாரணமாக ரூ.5 கோடி கோரி அப்போதைய துணை பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்தார்.
தமிழகத்தின் நிதியமைச்சர் பொறுப்பும் கருணாநிதி கையில்தான் இருந்தது. கருணாநிதி ரூ.5 கோடி நிவாரணம் கேட்க மொரார்ஜி தேசாய், "எனது தோட்டத்தில் பணம் காய்க்கும் மரங்கள் இல்லை" என்றார்.

அதற்கு உடனே பதிலளித்த கருணாநிதி, "பணம் காய்க்கும் மரமே இல்லாதபோது அது எப்படி உங்கள் தோட்டத்தில் மட்டும் இருக்கும்?" என பதிலடி கொடுத்தார்.

இதேபோல், 1971-ல் இந்திரா காந்தி உருவாக்கிய ஆர்.காங்கிரஸ் கட்சியுடனான பொதுத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது ஆர் காங்கிரஸுக்கு கருணாநிதி வெறும் 15 இடங்களை மட்டுமே ஒதுக்கினார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சி.சுப்பிரமணியம் கோப ஆவேசத்துடன், "இது எங்கள் சுயமரியாதைக்கான சவால்" என்றார். அதற்கு கருணாநிதி சிறிதும் தயங்காமல், "திமுகவே சுயமரியாதை இயக்கம்தான்" என்றார். 

இந்திரா காந்தியை 4 ஆண்டுகள் தீவிரமாக எதிர்த்துவந்த நிலையில்,  1980 மக்களவை தேர்தலுக்கான முன் ஏற்பாடாக 1979 செப்டம்பர் மாதம் இந்திரா காந்தியை சந்திக்க அவரது இல்லத்துக்கே சென்றார். மக்களவை தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்தனர். 

அங்கிருந்து கருணாநிதி கிளம்பும் தருணத்தில் இந்திரா காந்தி, "நாம் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம்" எனக் கூறியபோது "இல்லை, இல்லை! நாம் பழைய அத்தியாயத்தைத் தொடர்கிறோம்" என்றார்.

நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக தொண்டர்கள் அனைவரது குடும்பத்துக்கும் கட்சி சார்பில் ரூ.200 மாதந்தோறும் அனுப்பிவைத்தார். அப்போது வெற்றிக்கொண்டான் என்ற அனல் பறக்கவிடும் திமுக பேச்சாளார் எனக்கு மட்டும் ஏன் ரூ.100 அனுப்பினீர்கள் என்று கேட்க. இன்னொரு 100 ரூபாய் உனது இரண்டாவது மனைவிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். 

2003-ல் விழுப்புரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கருணாநிதி இதை சுட்டிக்காட்டி, "எனக்கே இரண்டு மனைவிகள் என்பதால் இப்படிச் செய்தேன்" என்று விளக்கமும் அளித்தார்.

அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்புகளையும் சுவாரஸ்யமாக்கும் பழக்கம் கருணாநிதிக்கு உண்டு. ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், "ராமதாஸ் கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும்" என்கிறாரே எனக் கேட்க அங்கிருந்த நிருபர்களில் ராமதாஸ் என்ற பெயர் கொண்டவரை சுட்டிக்காட்டி "யார் இந்த ராமதாஸா?" என்று கேட்க அனைவரும் சிரித்துவிட்டனர்.

இப்படி சொல்லாற்றாலால் பேச்சுத்திறமையால் பல இறுக்கமான தருணங்களையும் இனிமையானதாக ஆக்கியவர் கருணாநிதி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close