[X] Close
 

முதல் குழந்தை முரசொலியுடன் கருணாநிதி!


murasoli-the-first-child-of-karunanidhi

  • பாரதி
  • Posted: 08 Aug, 2018 12:23 pm
  • அ+ அ-

தகவல் உதவி | கட்டுரையாளர்: ப- கோலப்பன் 

எனது முதல் குழந்தை.. இப்படித்தான் கருணாநிதி எப்போதும் முரசொலியை சுட்டிக்காட்டுவார். தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில் இன்று காலை அவரது உடலருகே ஒரு குழந்தையைப்போலவே முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டது.

இது திமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாளை மறுநாள் ஆகஸ்ட் 10-ம் தேதி முரசொலி நாளிதழ் 76-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த சூழ்நிலையில் கருணாநிதியின் உடலருகே முரசொலி இருப்பது நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்துள்ளது.

முரசொலி வளர்ந்த கதை..
திராவிட இயக்கத்தின் பல தலைவர்கள் பல்வேறு தருணங்களில் பத்திரிகைகள், வார இதழ்கள் தொடங்கினர். ஒருகாலகட்டத்தில் 250 என்ற எண்ணிக்கையை இது கடந்தது. ஆனால், இன்று திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழும், திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் முரசொலியும் மட்டும்தான் இருக்கின்றன.
1953-ல் அண்ணா தோற்றுவித்த நம்நாடு கூட முடங்கிவிட்டது. ஆசைத்தம்பியின் தனியரசும் ஓய்ந்துவிட்டது. ஆனால் 1942-ல் தொடங்கப்பட்ட முரசொலி இன்றும் மின்னுகிறது.

1938-ல் இந்தி எதிர்ப்புக்காக மாணவர்களை ஒருங்கிணைத்த கருணாநிதி 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பிரதியை வெளியிட்டு வந்தார். பின்னாளில் தமிழ்நாடு ’மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை 1941-ல் தொடங்கினார். இதன் முதலாம் ஆண்டு விழாவில் க.அன்பழகனும், கே.ஏ.மதியழகனும் கலந்து கொண்டனர்.

இது குறித்து தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், "விழாவுக்கு வருகை தந்த பேச்சாளர்களுக்கான பயண செலவுக்காக தனது தங்கச் சங்கிலையை ரூ.50 அடகுவைத்தேன்" என கருணாநிதியே நினைவு கூர்ந்திருந்தார்.

1942-ல் முரசொலி முதன்முதலில் துண்டு பிரசுரமாக பிரசுரிக்கப்பட்டபோது கருணாநிதி அதில் சேரன் என்ற புனைப் பெயரில் எழுதினார். அப்போது அவரது நெருங்கிய நண்பரான தென்னன் திராவிடர் கழகத்தின் செயலராக இருந்தர்.

1944-ல் தென்னன், முரசொலியில் காத்திரமான கட்டுரை ஒன்றை பதிவு செய்தார். வர்ணாஸ்ரமத்தை ஆதரித்து நடத்தப்பட்ட மாநாட்டைக் கண்டித்து வர்ணமா மானமா? என்று அவர் எழுதிய கட்டுரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆரம்ப நாட்களில் முரசொலி வாரந்தோறும் திங்கள்கிழமை அச்சடிக்கப்பட்டு திராவிடர் கழக கிளைகளுக்கு அனுப்பப்பட்டது. திமுக உறுப்பினர்களின் நன்கொடையால்தான் தன்னால் முரசொலியை நடத்த முடிந்ததாக கருணாநிதியே ஒருமுறை நினைவு கூர்ந்திருந்தார்.

முரசொலி குறித்து சில நினைவலைகளைப் பகிர்ந்து கொண்ட திருநாவுக்கரசு, "சிறிய இடைவெளிக்குப் பின்னர் 1948-ல் முரசொலி வாராந்திர பத்திரிகையாக மீண்டும் உயிர் பெற்றது. ஆனால், 25 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது கருணாநிதி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வசனகர்த்தாவாக சேர்ந்திருந்தார்" என்றார்.
சிறிய இடைவேளைக்குப் பின்னர் சென்னைக்கு பெயர்ந்தபின்னர் கருணாநிதி முரசொலியை மீண்டும் உயிர்ப்பித்தார். 1960 செப்டம்பர் 17 முதல் முரசொலி நாளிதழாக வரத்தொடங்கியது. முரசொலியை தடையின்றி நடத்துவதற்காகவே கருணாநிதி ஒரு ட்ரஸ்ட்டையும் உருவாக்கினார்.

கருணாநிதிக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான இணைப்புப் பாலமாக முரசொலி இருந்திருந்தாலும் திமுக தலைவர்கள் அதை அன்றாடம் வாசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கருணாநிதி பலமுறை முன்வைத்திருக்கிறார். உடன்பிறப்புக்கு கடிதம் என்ற தலைப்பில் முரசொலியில் அவர் எழுதிய கடிதங்கள் திமுகவின் ஆவணங்கள் என்றால் அது மிகையல்ல.

அப்படிப்பட்ட முரசொலி பிரதி இன்று கருணாநிதியின் அருகே வைக்கப்பட்டிருப்பது அது அவரது குழந்தைதான் என்பதை நிரூபிக்கும் செயல்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close