[X] Close
 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Marina4Kalaignar


marina4kalaignar-trends-in-twitter

  • பாரதி
  • Posted: 07 Aug, 2018 20:56 pm
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதியில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் ட்விட்டரில் #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது.

திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.10 மணி அளவில் மறைந்தார். அவருக்கு வயது 95. கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி 11 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.

இதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஸ்டாலினும் துரைமுருகனும் மனு கொடுத்தனர்.
ஆனால், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதியில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால், காந்தி மண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும். அரசிதழில் இரங்கல் செய்தி வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், திமுக தலைவரை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடமளிக்கக் கோரி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக காவேரி மருத்துவமனை அருகே தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

#Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் "வேண்டும் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்" என கோஷமிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close