[X] Close

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: தமிழகத்தில் தற்போதைய நிலை என்ன?


karunanidhi-health-critical

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 07 Aug, 2018 18:32 pm
  • அ+ அ-

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் ஆனதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல்நிலை தீவிரமாக மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். 

இன்று (ஆகஸ்ட் 8) அவரது உடல்நிலை குறித்துக் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ''கருணாநிதியின் உடல் நிலை கடந்த சிலமணி நேரங்களாக மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகிறது. முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தற்போது நிலை என்ன?

* டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்துமே மூடப்பட்டு வருகிறது.

* தமிழகம் முழுக்கப் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். சென்னையில் காவேரி மருத்துவமனை, சிஐடி நகர், கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

* தமிழகம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக மாவட்டங்களில் உள்ள காவல் ஆணையர்கள், எஸ்பிகள், ஐஜிகளுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவை அனுப்பியுள்ளார்

* காவேரி மருத்துவமனை முன்பு அதிகளவில் திமுக தொண்டர்கள் கூடியுள்ளார்கள். மேலும், அதிகளவில் கூட்டம் கூடாதபடி போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

* சென்னையில் மாநகரப் பஸ்களின் சேவை பல்வேறு இடங்களில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது

* மதுரை, நெல்லை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் சேவையை ரத்து செய்வதாகப் பெரும்பாலான ஆம்னி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

* சென்னையில் மின்சார ரயில், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது. அலுவலகங்களிலிருந்து பொதுமக்கள் இல்லங்களுக்குத் திரும்பி வருகிறார்கள்.

* பல்வேறு திரையரங்குகளில் இன்று (ஆகஸ்ட் 8) மாலை முதல் நாளை (ஆகஸ்ட் 9) மாலை வரை அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், சினிமா நிகழ்ச்சிகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close