[X] Close
 

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: கதறும் தொண்டர்கள்


karunanidhi-health-medical-bulletin-paints-a-grim-picture-cadre-keep-vigil

  • பாரதி
  • Posted: 07 Aug, 2018 10:09 am
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. முதல்முறையாக மருத்துவமனை அறிக்கையிலேயே கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வயது மூப்பினால் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறது. 

கருணாநிதி கடந்த ஜூலை 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் சிறிய பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் முன்னேறியது ஆனால் நேற்றிரவு (திங்கள்கிழமை இரவு) அவரது உடல்நிலை மோசமடைந்தது. 'தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை குறித்து தெரிவிக்க முடியும்" என்று மருத்துவமனையும் தெரிவித்துவிட்டது. இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள் காவேரி மருத்துவமனையை நோக்கிக் குவிந்தனர்.

கோஷம் எழுப்பும் தொண்டர்கள்..
காவேரி மருத்துவமனை பகுதியில் கட்டுக்கு அடங்காத அளவுக்கு திமுக தொண்டர்கள் குவிந்தனர். எழுந்து வா தலைவா.. எழுந்து வா வீரத் தமிழே என்று தொண்டர்கள் முழங்கியதைக் கேட்க முடிந்தது. முதன்முறையாக தயாளு அம்மா நேற்று கருணாநிதியை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். மதியம் 2 மணி போல் பின்வாசல் வழியாக வந்த தயாளு அம்மாள் பின்வாசல் வழியாக வெளியேறினார். அரை மணி நேரம் அவர் அங்கிருந்தார். தயாளு அம்மாள் திடீரென மருத்துவமனைக்கு வந்தபோதே கருணாநிதிக்கு உடல்நிலை மோசமாகிவிட்டதா என்ற சலசலப்பு எழுந்தது. இரவு மருத்துவமனை அறிக்கை அதை உறுதி செய்தது.

அறிக்கைக்கு முன்னரே சொன்ன திருநாவுக்கரசு..
மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்துவிட்டு திரும்பிய தமிழக காங்கிரஸ் தலைவர், "கருணாநிதியின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்கள். அவர் நலம் பெற நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்" எனக் கூறிச் சென்றார்.

ஸ்தம்பித்த ஆழ்வார்பேட்டை மேம்பாலம்:
கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவலால் காவேரி மருத்துவமனை அருகே உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலம் நேற்றிரவு ஸ்தம்பித்தது. தொண்டர்கள் சாரை சாரையாக வந்தனர். பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். 
மருத்துவர்கள் சொன்ன 24 மணி நேரம் இன்னும் நிறைவடையாததால் திமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close