[X] Close

அன்று கருகாத உயிர் ஒன்று இன்று உறவோடு இணைந்தது: ஏர்வாடி சம்பவமும் ஒரு நெகிழ்ச்சியான தருணமும்


do-you-remember-yervadi-incident

சின்னராமன் - படம்: சிறப்பு ஏற்பாடு.

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Aug, 2018 16:43 pm
  • அ+ அ-

ஆகஸ்ட் 6. இது காலண்டரில் நமக்கு வழக்கமான நாள்தான். ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மக்களுக்கு இது ஒரு துக்க நாள். 2001-ல் இதே நாளில்தான் அந்த கோர சம்பவம் நடந்தது. 

ஏர்வாடியில் ஏராளமான மனநல காப்பகங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு மனநல காப்பகத்தில், ஆகஸ்ட் 6 2001 அன்று காலை 5 மணியளவில் தீ மளமளவென பற்றியது. நம்மைப் போன்றோர் ஓடி தப்பிக்க வழி தெரியும் ஆனால் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதுகூட அறியாத அந்த மனநோயாளிகள் என்ன செய்ய முடிந்திருக்கும். 25 பேர் உடல் கருகி இறந்தனர். இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். 

இந்த சம்பவம் அரசாங்கத்தை தட்டி எழுப்பியது. அங்கிருந்த காப்பகங்கள் மூடப்பட்டன. அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆண்டுதோறும் நினைவேந்தல்..
இந்த கோர சம்பவத்தை ஒட்டி 17-வது ஆண்டாக மதுரையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மதுரை செல்லமுத்து ட்ரஸ்ட் மற்றும் அறக்கட்டளை சார்பில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. ஏர்வாடி சம்பவத்துக்காக ஒவ்வோர் ஆண்டும்தான் இங்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால், இன்றைய கூட்டம் சற்று
தனிச்சிறப்புடையது. காரணம் அன்று கருகாமல் தப்பித்த உயிர் ஒன்று இன்று உறவுகளுடன் இணைந்தது.

இது குறித்து செல்லமுத்து ட்ரஸ்டின் மக்கள் தொடர்பு அதிகாரி ராமு கூறியதாவது:
சின்னராமன். உசிலம்பட்டியைச் சேர்ந்த இவர் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சில ஆண்டுகளில் குணமடைய மீண்டும் ஊர் திரும்பினார். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாததால் மீண்டும் மனநல பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை குடும்பத்தார் அவரை ஏர்வாடி மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். 2001 சம்பவத்தில் உயிர் தப்பிய அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவுக்கு மனநலம் தேற இட நெருக்கடி காரணமாக அங்கிருந்து 2012-ம் ஆண்டு மதுரை செல்லமுத்து அறக்கட்டளைக்கு மறுவாழ்வு பயிற்சிக்காக வந்தார். சுயசுகாதாரம், சமூக உறவு, தொழில் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. 

கடந்த ஓராண்டாகவே இவரது மன நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. தோட்ட வேலைகளில் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகிறார். இந்நிலையில்தான் இவரது அண்ணன் மகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தனது சித்தப்பா குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர்கள், சின்னராமன் மதுரையில் இருப்பதாகக் கூற 10 நாட்களுக்கு முன்னர் அவர் எங்களைத் தொடர்பு கொண்டார். ஆகஸ்ட் 6-ம் தேதி நினைவேந்தல் கூட்டதின்போது அவரை ஒப்படைத்தால் அது தனிச்சிறப்பாக அமையுமே என்பதால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். சின்னராமன் அவரது குடும்பத்துடன் இணைக்கப்பட்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சி. அவர்களுக்கும் பெரு மகிழ்ச்சி" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close