[X] Close

ஆக.15 முதல் மூலிகைப் பெட்ரோல் விற்பனை!- பற்றவைக்கும் ராமர் பிள்ளை


ramar-pillai-on-herbal-petroleum

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Aug, 2018 12:40 pm
  • அ+ அ-

ராமர் பிள்ளையை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரை மறந்திருக்காவிட்டால் மூலிகைப் பெட்ரோலையும் மறந்திருக்க வாய்ப்பில்லை. 1990-களின் இறுதியில் பரபரப்பைக் கிளப்பிய ராமர் பிள்ளை தற்போது மீண்டும் தனது அதிரடி அறிவிப்பு மூலம் விவாதங்களைப் பற்ற வைத்திருக்கிறார். வரும் சுதந்திர தினம் முதல் மூலிகைப் பெட்ரோல் விற்பனைக்கு வரும் என்கிறார்.

இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "2018 ஆகஸ்ட் 15-க்கு முன்னதாகவே மூலிகைப் பெட்ரோல் மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும். 2014-ல் 17 இடைப்பட்ட காலகட்டத்தில் ராணுவத்துடனான டை அப்பில் சில ஆய்வுகள் செய்திருக்கிறோம். ராணுவமும் இதற்கான சான்றிதழை வழங்கியிருக்கின்றனர். ராணுவத்திடமிருந்து தகவல் இடைவெளியால் இந்த மூலிகைப் பெட்ரோல் சந்தைப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. ஆயிலை வரது உள்ளிட்ட 16 வகை மூலிகைகள் அடங்கிய குடும்பம். அதிலிருக்கும் டெர்பின் என்ற எக்ஸ்ட்ராக்டை எடுத்துதான் அதில் சில கலவைகளைச் சேர்த்து மூலிகைப் பெட்ரோலைத் தயாரிக்கிறோம்.

எனது இன்றைய நிலைமைக்கு அரசியல்வாதிகள்தான் காரணம். மத்திய அமைச்சர் ஒருவரும் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஒருவரும்தான் காரணம். 75,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் வாங்கிவிட்டு அமைச்சர்கள் சிலர் பணம் தராதபோதுதான் எனக்கு சிக்கல் ஏற்பட்டது.

மத்திய அரசாங்கத்தின் சார்பில் சோதனை செய்தவர்கள், இது மூலிகை பெட்ரோல் அல்ல ஆனால் மூலிகைப் பெட்ரோல் போன்ற மாற்று எரிபொருள் என்பதை அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர்.
எனது மூலிகைப் பெட்ரோலை வாங்கியவர்களிடமிருந்து எந்தப் புகாரும் இல்லை. 15 லட்சம் லிட்டருக்கு நான் விற்பனை வரி செலுத்தியிருக்கிறேன். 

வரும் சுதந்திர தினம் முதல் எனது பெட்ரோலை தனியார் நிறுவனத்தின் உதவியுடன் விற்பனைக்கு கொண்டு வருகிறேன். ஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய் ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாய் என்றளவில்தான் உற்பத்தி விலை வருகிறது. எல்லாவற்றையும் கணக்கிட்டுவிட்டேன். அரசியல்வாதிகளின் சதியால் நானும் என் குடும்பத்தினரும் நிறைய இழந்துவிட்டோம். இனியும் அரசியல்வாதிகள் குறுக்கிட முடியாது. இந்த சுதந்திரதினம் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம்"

இவ்வாறு அவர் பேசினார். அவரது பேச்சு மீண்டும் பல வாதவிவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

ராமர் பிள்ளை மீதான வழக்கும் கைதும்..

மூலிகை பெட்ரோல் மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளதாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை 1999-2000-ம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை ‘ராமர் பெட்ரோல்’ ‘ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள்’ என்ற பெயர்களில் விற்பனை செய்தார். அதற்காக சென்னை, புறநகர் பகுதிகளில் 11 விற்பனை நிலையங்களையும் தொடங்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்ட்களை நியமித்தார். ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருள் ஐஎஸ்ஐ தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது.

பின்னர், தவறான தகவல்களை கூறி எரிபொருளை விற்பனை செய்து ரூ.2.27 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் ரசாயனம் கலந்து பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த சிபிஐ, ராமர் பிள்ளையை கைது செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘‘மோசடி வழக்கில் கைதான ராமர் பிள்ளை, ஆர்.வேணுதேவி, எஸ்.சின்னசாமி, ஆர்.ராஜசேகரன், எஸ்.கே.பரத் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close