[X] Close

கைதுக்குப் பின்னும் கல்லா கட்டும் ஹீலர் பாஸ்கர்


who-is-healer-bhaskar

ஹீலர் பாஸ்கர், உதவியாளர் சீனிவாசன்.

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Aug, 2018 11:45 am
  • அ+ அ-

இணையம் ஒருவரை உயர்த்திப் பிடிக்கவும் செய்யும் ஒரே நாளில் ஓய்த்துவிடவும் செய்யவும். அப்படித்தான் அண்மையில் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு கைதும்கூட இணையத்தால் லாபமாகியிருக்கிறது.


ஹீலர் பாஸ்கர் கைதான பிறகுதான் அவர் யார் என அறியாதவர்கள்கூட அறிந்துகொள்ள விரும்ப அவரது வீடியோக்கள் யூடியூபில் பரவலாகப் பார்க்கப்படுகின்றன. வாட்ஸ் அப் குழுக்களில் ஹீலர் பாஸ்கரின் வீடியோக்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

சரி யார் அந்த ஹீலர் பாஸ்கர்?
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர். பாஸ்கர் அடிப்படையில் சிவில் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ படித்தார். பின்னர் அக்குபஞ்சர் சிகிச்சையிலும் டிப்ளமோ பயின்றார். இரண்டு படிப்புகளுக்கும் இமி அளவும்கூட சம்பந்தம் இல்லை. ஆனால், ஹீலர் பாஸ்கர் சொல்வதை அப்படியே பின்பற்ற ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது. அக்குபஞ்சர் பயின்றதால் தனது பெயருக்கு முன்னர் ஹீலர் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்.
மருந்தில்லா மருத்துவம், தொடு சிகிச்சை என்று கடந்த 2009-ம் ஆண்டு முதல் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். மக்கள் கூட்டம் அதிகரிக்கவே 2012-ல் கோவ புதூரில் நிஷ்டை என்ற ஒரு அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பை அனாடமி தெரபி ஃபவுண்டேஷன் என்றே அவர் அறிமுகப்படுத்துகிறார். முகாம்களும் நடத்துகிறார். பிரதி மாதம் 5 நாட்கள் இந்த முகாம் நடைபெறுகிறது.

முகாமுக்கு வருபவர்களிடம் நான் 8 மணி நேரம் 5 நாட்கள் பேசுவேன். நான் பேசுவதைக் கேட்பதுதான் அவர்களுக்கு சிகிச்சை. என் பேச்சு உயிரையும் உள்ளத்தையும் புத்தியையும் சென்றடையும். அந்த புரிதல்தான் சிகிச்சை. அதுதான் செவிவழி தொடு சிகிச்சை என்று பிரகடனம் செய்கிறார்.

அலோபதி சிலபஸே தப்புப்பா..
அலோபதி மருத்துவத்தின் மீதான விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. பக்க விளைவுகள் போன்ற குறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், அலோபதி மருத்துவமே தவறு அதன் சிலபஸே தப்பு என்பதுதான் ஹீலர் பாஸ்கரின் வாதம்.

அலோபதி மருத்துவர்கள் தவறானவர்கள் அல்ல. அவர்களை இயக்கும் அலோபதி மருந்து முதலாளிகளால்தான் சர்க்கரை என்பது நோயாகவும் கேன்சர் என்பது சிகிச்சையற்றதாகவும் இருக்கிறது என்கிறார்.

தண்ணீரில் ஈத்தேனும் மீத்தேனும் இருக்கிறது..
தண்ணீரை காய்ச்சி குடிப்போம்.. என்பதுதான் எல்லா மருத்துவமனையிலும் வைக்கப்பட்டிருக்கும் அடிப்படை அறிவுரை. ஆனால், தண்ணீரைக் காய்ச்சினால் அதிலிருக்கும் சத்துக்குள் போய்விடும் என்பதுதான் ஹீலர் பாஸ்கரின் பிரச்சாரம். சாதாரண தண்ணீர் ஆர்கானிக். கொதிக்க வைத்த தண்ணீர் ஆர்கானிக் அல்ல. தண்ணீரில் ஈத்தேன், மீத்தேன் போன்ற வாயுக்கள் இருக்கின்றன. கொதிக்க வைப்பதனால் அவை வீணாகிவிடும் என வீடியோ பிரச்சாரம் செய்கிறார்.

பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் கிட்னி பிரச்சினை வரும்..
சிறுநீரக நோய் தைரியமானவர்களுக்கு வராது. ஆள் மனதில் எப்போதும் ஒருவகை பயம் கொண்டவர்களுக்குத்தான் சிறுநீரகக் கோளாறு வரும் அடித்துச் சொல்லும் ஹீலர் பாஸ்கர் பித்தப்பை கல் ஏற்படுவதைத் தடுக்க இவர் சொல்லும் சிகிச்சையைக் கேட்டால் உங்கள் தலை சுற்றிவிடும்.
மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையே ஒரு சாம்பார் வடையை நன்றாக மென்று தின்றால் பித்தப்பைக் கல் சொல்லும் குட்பை என்று அதிர வைக்கிறார்.

உங்களுக்கு நோய் வந்தால் அருகிலிருக்கும் மருத்துவரைப் பாருங்கள் அவர் எதை எல்லாம் செய்யக்கூடாது என்கிறாரோ அதை எல்லாம் செய்யுங்கள். இதுதான் ஹீலர் பாஸ்கரின் மருத்துவம்.

இப்படி இவர் சொன்னது எல்லாம் அவரது முகாம்களுக்குச் சென்ற 200, 300 பேருக்கு மட்டுமே சென்றடைந்த நிலையில் இவரது கைதும் கைது குறித்து நெட்டிசன்கள் நடத்திய விவாதமும் இவரது யூடியூப் சேனலை கல்லா கட்ட வைத்திருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close