[X] Close

அன்று கோப்புகளுடன் நீதிமன்றம்.. இன்று கலப்பையுடன் விவசாயம் 


former-judge-opts-for-greener-pastures

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Aug, 2018 10:28 am
  • அ+ அ-

வழக்கு விசாரணைகள், தீர்ப்புகள், வாய்தாக்கள் என கறுப்பு கவுனும் கோப்புகளுமாக சுழன்று கொண்டிருந்த மேனாள் நீதிபதி ஏ.செல்வம் தற்போது தனது சொந்த கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்வம் கடந்த ஏப்ரல் 4-ம் தேதிதான் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நாளிலேயே தனக்கு அரசு வழங்கிய கார், பங்களா ஆகியவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள தனது சொந்த கிராமமான புல்லங்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார்.

சொந்த ஊரில் தற்போது விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்தில் விளையும் அரிசியைத் தான் பயன்படுத்துகிறார். விவசாயத்துக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறார். பழத்தோட்டம் பயிரிட்டு பராமரித்து வருகிறார். இப்படி சொந்த ஊர், விவசாயம் என அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை அண்மையில் பார்க்கச் சென்ற வழக்கறிஞர்கள் சிலர் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர். காரணம் கோப்புகளுடன் பார்த்த அவரை விவசாய நிலத்தில் களப்பையுடன் பார்க்க அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது.

அதை அப்படியே தங்கள் மொபைலில் படம் பிடித்திருக்கின்றனர். டிராக்டரில் அமர்ந்து கொண்டு டிஷர்ட் ஷார்ட்ஸ் சகிதமாக தலையில் தலப்பாகை கட்டி விவசாயம் செய்த அந்த வீடியோ வைரலானது. 

இது குறித்து நீதிபதி செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், "நான் விவசாயம் செய்வதில் ஆச்சரியப்படுவதற்கும் ஏதுமில்லை. எனது தந்தை ஒரு விவசாயிதான். நான் கலைக் கல்லூரி செல்லும்போது வேட்டி கட்டியே செல்வேன். காரணம் ஏழை விவசாயியான எனது தந்தையால் எனக்கு பேன்ட் வாங்கித் தர இயலாது. சட்டக் கல்லூரியில் சேர்ந்த பின்னர்தான் நான் கால்சட்டையும் காலணியும் அணிந்தேன். அதனால் எனக்கு இதெல்லாம் புதிது அல்ல" என்றார்.

1981-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் சேர்ந்த பிறகு 5 வருடங்கள் வழக்கறிஞராக பணி செய்தார். பின்னர், 1986-ல் மாவட்ட முன்சிப் மற்றும் ஜூடிசியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். 1989-ல் சார் நீதிபதியாகவும் 1997-ல் மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வுகள் பெற்றார். 2006-ல் இருந்து 2018 வரை 12 ஆண்டுகள் மெட்ராஸ் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகித்தார்.

சீமைக் கருவேல மரங்களுக்குத் தடை..
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதில் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. எந்த பயனையும் தராத கருவேல மரங்களை அகற்றினால்தான் நிலத்தடி நீரை காப்பாற்ற முடியும் என நீதிபதி செல்வம் ஆணித்தரமாகக் கூறினார்.
சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட அவர் தற்போது இயற்கை உரங்களைக் கொண்டு விவசாயம் செய்து வாழ்க்கையை எளிமையாக நகர்த்தி பிறருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.

"நான் இப்போது இயற்கையின் நீதியுடன் காதல் கொண்டிருக்கிறேன். இயற்கையின் நீதியை எந்தப் புத்தகத்திலும் படிக்க முடியாது. எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது" என்றார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close