[X] Close
 

தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு இலவச 'கவுன்சிலிங்': மகப்பேறு கல்வியாளரின் பொதுசேவை


breast-feeding

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

  • பாரதி
  • Posted: 02 Aug, 2018 16:35 pm
  • அ+ அ-

தாய்ப்பாலின் நண்மைகள், முக்கியத்துவம் பற்றி மதுரை மகப்பேறு பெண் கல்வியாளர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக உலக தாய்ப்பால் வார விழா நாட்களில் பொது இடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று பிரசவமான தாய்மார்களை, கர்ப்பிணிப் பெண்களை சந்தித்து விழிப்புணர்வு செய்து வருகிறார்.

உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-1 முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. தாய்பாலின் அருமைகளை விளக்கவே இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.  குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, புரதம் உள்ளிட்ட எண்ணிலடங்கா சக்திகள் தாய்ப்பாலில்  அடங்கியுள்ளது.

அனைத்து விதமான சத்துகளும் சரியான விகிதத்தில் இயற்கையாகவே அமைந்த தாய் பால் எளிதாக கிடைக்கிறது. ஆனால், சர்வதேச குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரை துரைச்சாமி நகரை சேர்ந்த மகப்பேறு கல்வியாளரும், தாய்பால் ஊட்டுதல் ஆலோசகருமான பெ.ஹரிதா என்பவர், உலக தாய்பால் வாரவிழாவையொட்டி கடந்த 3 ஆண்டாக மால்கள், பஸ் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று கர்ப்பிணி பெண்கள், பிரசவமான தாய்மார்களை சந்தித்து இலவசமாக தாய்ப்பாலின் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்.  

மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு தயாராகும் பெண்கள், பிரசவமான பெண்களை சந்தித்து அவர்களிடம் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள், பிரசவ நேர பயிற்சி, தாய்ப்பாலுட்டுதல், தாய், சேய் பராமரிப்பை பற்றி வகுப்புகள் எடுக்கிறார்.  கடந்த 2 ஆண்டாக கோவை மாநகரில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த அவர், இந்த ஆண்டு மதுரையில் மேற்கொண்டுள்ளார். 

மதுரை கோகலே சாலையில் உள்ள மருத்துவமனையில்  பிரசவத்திற்கு தயாரான பெண்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஹரிதாவை சந்தித்தோம்.

அவர் நம்மிடம் கூறுகையில், ‘‘பெண்கள் மூட நம்பிக்கையாலே தங்கள் குழந்தைகளுடைய ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள். தாய்ப்பாலுக்கு இணையான உணவு கிடையாது. எளிமையாக, எளிதாக கிடைக்கும் தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் எண்ணிலடங்காதவை. இல்லை என்ற சொல்வதற்கு அதில் எதுவுமே இல்லை. அதனாலே தாய்பாலை திரவ தங்கம் என்கிறோம். முதல் ஒரு மணி நேரம் பிறக்கும் குழந்தைகளுக்கு பொன்னான நேரம். அந்த நேரத்தில்  ஏதோ ஒரு காரணத்தால் தாய்பால் கொடுக்க முடியாவிட்டால் கைவழியாகவும், ஸ்பூன் வழியாகவும் தாய்பாலை கொடுக்க வேண்டும். பவுடர் கலக்கி பாட்டிலில் கொடுப்பது தவறான செயல்.

தாய்ப்பால் ஊட்டுதல் பற்றிய தவறான தகவல்கள், மூடநம்பிக்கைகள் அதிகளவில் பரவுகிறது.

எது உண்மை, பொய் என்பதை கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்கள் உணர வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒருவரிடம் போய் ஆலோசனை பெற வேண்டுமா என்ற அறியாமை பெண்களிடம் இருக்கிறது. மகப்பேறு மருத்துவர்கள், மகப்பேறு கல்வியாளர்கள், தாய்ப்பால் ஊட்டுதல் ஆலோசகர்கள் உள்ளனர். அதற்காகவே அவர்களை இந்த உலக தாய்பால் வார விழா நாளில் சந்தித்து இலவசமாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறேன்.

தாய்பாலுக்கு மாற்று பவுடர் தேவையில்லை. ஒரு வேளை தாய்பால்  இல்லாவிட்டால் மாற்று தாய்ப்பால் குடிக்க வைக்கலாம். அரசு மருத்துவமனையில் பதப்படுத்தப்பட்ட வழங்கப்படும் தாய் பால் கொடுக்கலாம். சர்வதேச அளவில் பால் பவுடர்களுக்கான மார்க்கெட் அதிகமாகிவிட்டது. அவர்கள் குஷ்டியான குழந்தைள்தான் ஆரோக்கியமான, அழகான குழந்தை என்று சொல்கிறாரகள். அதற்கு பால் பவுடர் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது அந்த குழந்தைகள் ஊட்டச்சத்தோடு வளரும், மூளை வளர்ச்சி அதிகமாகும் என்கிறார்கள். அது கிடையாது என்பதை, இந்த விழிப்புணர்வில் பெண்களிடம் புரியவைக்கிறோம். 

பிரசவித்த தாய்களுக்க மாட்டுப்பால் கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும் என்ற பரவலான மூட நம்பிக்கை உள்ளது. தேவைக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீரை குடித்தாலே குழந்தைகளுக்கு தேவையான பால் பிரசவித்த தாய்களுக்கு சுரக்கும்.

பொது இடங்களில் பால் கொடுக்க யோசிக்கிறார்கள்.

2 வயது வரை கட்டாயம் தாய்பால் கொடுக்க வேண்டும். முதல் 6 மாதங்கள் தாய்பால் தவிர்த்து எதுவும் கொடுக்கக்கூடாது. தாய்பால் எந்த நேரத்திலும் எப்போதும் கிடைக்கும். நாகரீக வாழ்கையில் பாரம்பரிய தாய்ப்பால் போன்ற உணவுகளை தொலைத்துவிட்டு நிறைய நோய்களை பெறுகிறோம்" என்றார்.

 

ஒய். ஆண்டணி செல்வராஜ்




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close