[X] Close

வீட்டிலேயே பிரசவம்; பெண் பரிதாப மரணம்: முதல் தகவல் சொல்வது என்ன?


lady-dies-after-delivering-baby-at-home

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Jul, 2018 17:01 pm
  • அ+ அ-

சமூக வலைதளங்கள் இப்போதெல்லாம் செய்திக்கான சோர்ஸ் ஆகிக்கொண்டிருக்கின்றன. அண்டை வீட்டில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வோ, குற்றச்செயலோ அல்லது பொது இடங்களில் நடைபெறும் சம்பவங்களோ முதலில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவாகிவிடுகிறது.

கேமரா செல்ஃபோன் எல்லோரையுமே வீடியோக்காரர்களாக போட்டோகிராஃபர்களாக்கிவிட்டது. அப்படியே கோர்வையாக நாலு வரி எழுதியும்விட்டார்கள் என்றால் அது வைரல் செய்தியாகிவிடுகிறது.
அப்படித்தான் கடந்த மூன்று மணி நேரமாக சமூக வலைதளத்தில் உலவிவந்த திருப்பூர் பெண்ணுக்கு யூடியூப் பார்த்து பிரசவம் செய்யப்பட்ட செய்தி அந்த பகுதி போலீஸ்காரர்களை விசாரணையை முடுக்கிவிடச் செய்திருக்கிறது.

இது முதல் தகவல்:
திருப்பூர் தாராபுரம் அருகே காங்கேயம் சாலை ரத்தினகிரீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் பின்னலாடை நிறுவனத்தில் டையிங் யூனிட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி கிருத்திகா வயது 28. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்குத் திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. 

கிருத்திகா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது கணவரும் அவரின் நண்பர் பிரவீனும் சேர்ந்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.
பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து கிருத்திகாவை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்திருக்கிறார்.

பிரேதப் பரிசோதனை ஏதும் செய்யாமலேயே சடலத்தை வாங்கிச் சென்றிருக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் மருத்துவமனையில் ட்யூட்டி டாக்டர் மட்டுமே இருந்திருக்கிறார். அவரும், கிருத்திகாவுக்கு ஏன் வீட்டிலேயே குழந்தை பிறந்தது என்று விசாரிக்கவில்லை.

இந்நிலையில் சடலத்தை சிதையூட்ட மறுப்பு தெரிவித்த இடுகாட்டு ஊழியர்கள் மருத்துவச் சான்றிதழ் வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் கிருத்திகாவின் உறவினர்கள் மருத்துவச் சான்றிதழ் கேட்க மருத்துவமனையோ போலீஸாரை அணுகுமாறு கூறியுள்ளது. ஒருவழியாக போலீஸில் கூறிவிட்டு மருத்துவச் சான்றிதழ் பெற்று சடலத்தை சிதையூட்டியுள்ளனர்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வேறு மாதிரி தகவல் பரவவே நல்லூர் ஊரக போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் வீட்டில் பிரசவம் பார்த்தது, பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது, தாய் இறந்தது உண்மை எனத் தெரிய வந்துள்ளது. ஆனால், யூடியூப் பார்த்துதான் பிரசவம் பார்த்தார்களா என்பதை இன்னும் போலீஸார் உறுதி செய்யவில்லை.

போலீஸார் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இன்னும் கைது நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

- திருப்பூர் கார்த்திகேயன்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close