[X] Close

சரிகா ஷாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா?


do-you-remember-sarika-shah

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Jul, 2018 11:39 am
  • அ+ அ-

1998-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் பிபிஎம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சரிகா ஷா தனது தோழிகளுடன் அருகிலிருந்து ஜூஸ் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக ஆட்டோவில் வந்த சிலர் சரிகா ஷா மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அப்போது அவர்களிடம் தப்பிக்க ஓட்டிய சரிகா ஷா தவறிவிழ அவர் மீது ஆட்டோ விழ படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஜூலை 24-ம் தேதி இறந்தார். அன்றுதான் அவருக்குப் பிறந்தநாளும்கூட. பிறந்தநாளிலேயே உதிர்ந்தது அந்த மலர். சவுகார்பேட்டையை மட்டுமல்ல சரிகா ஷாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. அவரது மரணம்தான் ஈவி டீஸிங் என்ற கொடூரத்தின் உச்சத்தை அம்பலப்படுத்தியது. அதன்பின்னர் புதிதுபுதிதாக சட்டங்கள் கூட தீட்டப்பட்டன.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது வேதனை தருகிறது. ஈவ் டீஸிங் செய்ததாலேயே மாணவி சரிகாஷா பலியாகி உள்ளார். எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்கிறேன். 

இந்த வழக்கில் அரசுக்கு சில பரிந்துரைகளை சொல்ல விரும்புகிறேன். பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரி பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும். இதற்காக அரசு பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

சரிகா ஷா இறந்து சரியாக 20 வருடங்கள் ஆகின்றன.

இன்றைக்கும்கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிதான் வருகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாத சூழலில்தான் இருக்கின்றனர். நேரில் பின் தொடர்வது சென்று இணையவெளியில் பின் தொடரும் சைபர் குற்றங்கள் அதிகரித்துவிட்டன.

காலத்துக்கு ஏற்ற மாதிரி ஈவ் டீஸிங் மாறியிருக்கிறது. ஆனால், பெண்கள் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இன்னமும் பெண் பிள்ளைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லித் தருவதிலும் பெண் பிள்ளைகளுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுத் தருவதையும்தான் நாம் அறிவுரையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், ஆண் பிள்ளைகளுக்கு ஒரு பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுக்கிறோமா? ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பாலின சமத்துவத்தைப் போதிக்க வேண்டும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது என்பதுபோல் பாடப் புத்தகத்தில் இதை எழுதி வைத்து படிக்கச் சொன்னால் அது பழக்கத்தில் பிரதிபலிக்காது.

பெண்ணை மதிப்பது பண்பாடு என்று ஆண் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். வீட்டில் தாய், சகோதரி மற்ற பெண் உறவுகளுடனும் அக்கம்பக்கத்துக்கு வீட்டு பெண் பிள்ளைகளுடனும் பள்ளி, கல்லூரித் தோழிகளுடனும் பண்பாடுடன் பழக கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்தான் ஆணின் கவுரவம் இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். பெண் உடல் மீதான அரசியலைப் புரிய வைக்க வேண்டும். பெண்ணின் மாதவிடாய் வலியும் வேதனையும் அருவருக்கத்தக்கதல்ல அது ஓர் இயற்கை என்பதையும் புரிய வைக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிலிருந்து கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமூகத்தை சுத்திகரிக்க முடியும்.

இல்லாவிட்டால் அன்று ஈவ் டீஸிங்கில் சரிகா ஷா, பின்னர் கூட்டு வன்புணர்வில் நிர்பயா அப்புறம் குழந்தையைக் கூட விட்டுவைக்காத காம வெறியில் ஹாசினி, மாற்றுத்திறனாளி சிறுமியைக் கூட பெண் உடலாகப் பார்க்கும் வக்கிர மனநோயாளிகளால் அரங்கேறும் பலாத்காரம் என பெண்களுக்கு எதிரான வன்முறை நீண்டு கொண்டுதான் இருக்கும்.
சரிகா ஷாவை நினைவுகூர விரும்பினால் உங்கள் வீட்டு ஆணுக்கு பெண்ணை மதிக்கக் கற்றுக்கொடுங்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close