முதல்வருக்கு இதுவா வேலை?- அன்புமணி கேள்வி

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்த நிலையில் அவரை ட்விட்டரில் விமர்சித்திருக்கிறார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
முன்னதாக, சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து விட்டு, தண்ணீருக்கு மலூர் தூவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பணன், எம்.ஆர். விஜயபாஸ்கர், சரோஜா, பொதுப் பணித் துறை முதன்மை செயலர் பிரபாகர், சேலம் ஆட்சியர் ரோஹிணி மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில், "டெல்டா பாசனத்துகாக மேட்டூர் அணையை முதன்முறையாக முதல்வர் தொடக்கி வைத்தார்- செய்தி.
மேட்டூர் அணையை பாசனத்துக்காக திறப்பது என்பது பொதுப் பணித் துறை துணை செயற்பிரிவு பொறியாளரின் வேலை. ஒரு முதல்வருக்கு இதுவா வேலை?" என்று வினவியுள்ளார்.
அந்த ட்வீட்டின் கீழ் அன்புமணிக்கு ஆதரவாகவும் எடப்பாடியை விமர்சித்தும் ஒரு சில கருத்துகள் எடப்பாடிக்கு ஆதரவாகவும் பகிரப்பட்டு வருகின்றன.