[X] Close

சந்திரமுகி மாதிரி மாறிவரும் ரஜினி!


rajinis-take-on-chennai-salem-expressway-triggers-criticism

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Jul, 2018 13:54 pm
  • அ+ அ-

இன்று காலை பேப்பரின் தலைப்புச் செய்தியைக் காட்டிய நண்பர் ஒருவர் "ரஜினி முழுசா பிஜேபி ஆளாகவே" மாறிக் கொண்டிருக்கிறார்.. (பார் முழுசா சந்திரமுகியா மாறிக்கிட்டுருக்க உன் மனைவி கங்காவைப் பார்.. ) என்ற தொணியில் கமென்ட் அடித்தார். 

அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு எல்லாம் தளம்.. "நாடு வளர்ச்சி அடைவதற்கு சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை போன்ற பெரிய திட்டங்கள் தேவை. அப்போதுதான் தொழில் தொடங்கவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று நடிகர் ரஜினிகாந்த்" கூறியதுதான். 

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதுதான் இன்று ஊர் பேசும் செய்தி. பல்வேறு தளங்களிலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும் அந்த செய்தி குறித்து நண்பர் அளித்த விளக்கம் சுவாரஸ்யமாகவே இருந்தது.

ரஜினியின் என்ட்ரி..

போஸ்டர்லையே அரசியலுக்கு வந்து கொண்டிருந்தவர் திடீரென ரசிகர்களைப் பார்த்தபோது போர் வரும்போது வருவேன்னு சொன்னார். இதுவும் கடந்து போகும் என்று நினைத்தபோது டிசம்பர் 31 2017-ல் ஆண்டின் இறுதி பிரேக்கிங் நியூஸைக் கொடுத்தார். அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்றெல்லாம் அறிவித்தார். ஆனால், என் வழி ஆன்மீக அரசியல் வழி என்று சொல்லி விவாதக்களத்தை சூடுபடுத்திவிட்டுச் சென்றார்.

அட, திராவிட பூமியில் ஏதோ புது அரசியலை புகுத்தப் போகிறார் என்றுதான் எல்லோருமே நினைத்தனர். ஆனால், பழைய மொந்தையில் புதிய கள் மாதிரி புதுசா சித்தாந்தம் எல்லாம் ஏதுமில்லை என்பதுபோல் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறார் ரஜினி என்ற விமர்சனம் வலுத்து வருகிறது. இருந்தாலும், நான் முழுமையான அரசியல் கட்சித் தலைவராக வருவது பற்றி காலம்தான் பதில் சொல்லும் என்று ஒரு யு டர்னுக்கான ஆப்ஷனையும் ரஜினி எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொள்கிறார்.

கருத்துகளும் எதிர்வினைகளும்..

தமிழகத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்குப் பிறகு உணர்வுபூர்வமாக நடந்து வரும் போராட்டம் 8 வழிச்சாலையை எதிர்க்கும் போராட்டம். இந்த இரண்டு போராட்டங்களிலும் ரஜினியின் நிலைப்பாடுதான் அவர் முழுசா பாஜககாரராக மாறிவருவதற்கான அடையாளம் என்றார் நண்பர்.

கருத்து 1: "தூத்துக்குடி சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம். சமூக விரோதிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகம் போராட்ட பூமியாக இருந்தால் யாருக்கும் எந்த தொழில் வாய்ப்பும் கிடைக்காது. ஏற்கெனவே விவசாயமும் குறைந்துவிட்ட நிலையில் வேலைவாய்ப்பும் இல்லாவிட்டால் என்ன செய்வது" இது ஸ்டெர்லைட் கலவரத்துக்குப் பின்னர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றபோது பேசியதுதான் இது.

எதிர்வினை: ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்வினைகள் கிளம்பின. உளவுத்துறை ரிப்போர்ட் போல் ரஜினியின் பேச்சு இருப்பதாக விமர்சிக்கப்பட்டன. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக அல்லவா பேசியிருக்கிறார் என்ற ஆவேசம் எழுந்தது. அப்போதுதான் காலா ரிலீஸ் ஆகவிருந்ததால் காலாவில் வரும் இந்த உடம்புதான் ஆயுதம்.. கூட்டுங்கடா மக்களை என்ற வசனத்தையும் தூத்துக்க்குடி பேச்சையும் இணைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உலவவிடப்பட்டன.

கருத்து 2: சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை போன்ற பெரிய திட்டங்கள் வர வேண்டும். அப்படி வந்தால்தான் நாடு வளர்ச்சியடைய முடியும். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றும்போது தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால், சிலருக்கு பாதிப்பு ஏற்படும். அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும் அளவுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும். முடிந்தவரை விவசாய விளைநிலங்கள் பாதிக்காத அளவுக்கு செய்தால் மிகவும் நல்லது. இவ்வாறு ரஜினிகாந்த் நேற்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்றும் அவர் கூறியிருந்தார்.

எதிர்வினை: தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிர்க்கும் 8 வழி சாலைக்கு பாஜக பிரமுகரைப் போல் ரஜினி விளக்கம் கூறுகிறாரே என்று விமர்சனங்கள் வருகின்றன. தமிழகத்தின் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுக எதிர்க்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அவர் ஆதரிப்பது பாஜகவுக்கு துதி பாடும் செயல் என்று விமர்சிக்கின்றனர். அதேபோல், அமித் ஷா தமிழகத்தில் லஞ்சம் ஊழல் நிறைந்திருப்பதாகக் கூறிய கருத்துக்கு பதில் சொல்லாமல் தட்டிக் கழித்ததும் அவரது மேலிட பாசத்தையே உணர்த்துகிறது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

ஒரே நேர்க்கோட்டில்..

இப்படியாக ரஜினியின் நிலைப்பாட்டை விமர்சித்த அந்த நண்பர், தமிழகத்தைப் பொருத்தவரை ஊழலற்ற ஆட்சி, நல்லாட்சி என்ற புள்ளியில் ரஜினிகாந்த.. பாஜக என்ற இரு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் இணைய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறிச் சென்றார்.

இதை அசைபோட்டுக் கொண்டே முகநூலுக்குச் சென்றால் அங்கே ஒருவர் ரஜினிகாந்தை, "இமயமலைக்குச் செல்ல ஒரு எட்டுவழிச்சாலை போடுங்க சாமியோவ்..." என்று கலாய்த்திருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close