[X] Close
 

பல்கலைக்கழக மானியக்குழுவைக் கலைக்கக் கூடாது: உயர்கல்வி ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்


opposes-the-draft-bill-on-higher-education

  • kamadenu
  • Posted: 14 Jul, 2018 14:35 pm
  • அ+ அ-

பல்கலைக்கழக மானியக்குழுவைக் கலைக்கக்கூடாது என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், “மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட உயர்கல்வி ஆணையத்தின் வரைவு மசோதா குறித்து தமிழக அரசுக்கு எழுந்த ஐயங்கள் தொடர்பாக உங்களின் கவனத்திற்கு இந்தக் கடிதம் வாயிலாக கொண்டு வருகிறேன். இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கருத்துகளை கேட்டுள்ளது.

நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒழுங்குமுறை மற்றும் நிதி அதிகாரங்களைக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவைக் (யுஜிசி) கலைத்துவிட்டு அதற்கு பதிலாக ஒழுங்குமுறை அதிகாரத்தை மட்டும் கொண்டிருக்கும் உயர்கல்வி ஆணையத்தை அமைப்பதற்கான அவசியம் இல்லை என தமிழக அரசு கருதுகிறது.

1956 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மானியக்குழு தற்போது உயர் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் தரங்களை நிர்வகித்தல், கண்காணித்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புகளையும், பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி வழங்குவதற்கான அதிகாரத்தையும் எந்தவிதமான புகாரும் இன்றி செயலாற்றி வருகிறது. பெறப்பட்ட திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படையான முறையில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் தேவையான திறனை கொண்டுள்ளது. பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை பல்கலைக்கழக மானியக் குழு உறுதிப்படுத்துவதை அதன் நிதிசார்ந்த அதிகாரம் சாத்தியமாக்குகிறது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைய மசோதாவில் நிதி அதிகாரங்கள் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது வேறு ஏதேனும் அமைப்புக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் தமிழகத்திற்கு தகுதி அடிப்படையில் நிதி ஒதுக்குவது அவ்வளவு சாதகமாக இல்லை என்ற அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, உயர் கல்வி ஆணைய மசோதா குறித்து தமிழக அரசுக்கு வலுவான கவலைகள் எழுந்துள்ளன. மேலும், இந்த நிதி அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டால் நிதியுதவி 100% மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதிலிருந்து 60:40 என்ற விகிதத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையில் மாற்றப்படும் என்று நாங்கள் கருதுகிறோம்.

மேற்கண்ட காரணங்களுக்காக உயர்கல்வி ஆணைய மசோதா 2018-ஐ தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு தொடர வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close