[X] Close

4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது சிறுவாணி அணை


siruvani-reservoir-full

சிறுவாணி அணை. (கோப்புப் படம்)

  • kamadenu
  • Posted: 11 Jul, 2018 11:37 am
  • அ+ அ-

கோவை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் சிறுவாணி அணை, கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிரம்பியுள்ளதால் கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகின் மிகச் சுவையான, தூய்மையான தண்ணீரில் ஒன்றான சிறுவாணி நீர், கோவையின் பெருமைகளில் முதன்மை வகிக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு வட்டத்தில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் இந்த நதியின் பயணம் தொடங்குகிறது. இது பவானி ஆற்றின் துணை நதியாகும்.

கோவை நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கோவை நகராட்சி முயற்சியால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சிறுவாணி குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது. இதையொட்டி 1929-ல் சிறிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. எனினும், வளர்ந்து வரும் கோவை நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில் 1969 முதல் தமிழக அரசும், கேரள அரசும் ஆய்வுகள் நடத்தி, 1973-ல் புதிய அணையைக் கட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, கோவை நகரில் வீடு, சமூக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்குத் தேவையான நீரை தேக்க கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி, பராமரிப்புக்காக அதை தமிழகத்திடம் ஒப்படைத்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லையோர வனப் பகுதியில் உள்ள சிறுவாணி அணை தற்போது கோவை மாவட்டத்தின் முக்கியமான நீராதாரமாக உள்ளது. குறிப்பாக, கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகள் மற்றும் சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறுவாணி நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

கடல் மட்டத்தில் இருந்து சிறுவாணி அணை 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 650 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். இதிலிருந்து கோவையின் குடிநீர் விநியோகத்துக்காக தினமும் 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் வரை எடுக்கப்படும்.

கடந்த 2014-ல் சிறுவாணி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனினும், அதற்குப் பிறகு அணைக்கு வரும் நீரின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. மே, ஜூன் மாதங்களில், அணையின் நீர் உறிஞ்சுக் குழாய்களுக்கும் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. சுமார் 3 மாதங்களாக நீர் இருப்பு இறுதிக்கட்ட அளவிலேயே (டெத் ஸ்டோரேஜ்) தொடர்ந்தது. இதனால் அணையிலிருந்து குடிநீருக்காக நீரைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

பில்லூர் குடிநீர் 

எனினும், குடிநீர் தேவைக்காக கேரள அரசின் அனுமதியுடன், அணையின் மற்ற நீர்த்தேக்கப் பகுதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, கோவைக்கு கொண்டுவந்தனர். எனினும், வழக்கத்தைவிட 10 மடங்குக்கும் குறைவான அளவிலேயே தண்ணீர் கிடைத்தது. அப்போது, சிறுவாணி அணை நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகள் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டில் சிக்கின. சில பகுதிகளில் 15 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. குடிநீர் கோரி மக்கள் போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கினர். தண்ணீர்ப் பற்றாக்குறையை பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலம் மாநகராட்சி நிர்வாகம் ஈடுகட்டியது.

எனினும், அதற்குப் பிறகு மழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை கைகொடுத்த நிலையில், சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரத் தொடங்கியது. கடந்த மாதமே அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை குறைந்ததால் அணை நிரம்பவில்லை.

குடிநீருக்கு 112 எம்.எல்.டி

இந்நிலையில், சில தினங்களாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான முத்திகுளம், பாம்பாறு, பட்டியாறில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் 100 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. அணையின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியான 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பும் தொடர் மழையால் நிரம்பத் தொடங்கியது.

நேற்று முன்தினம் நீர்மட்டம் 47.50 அடியாக இருந்த நிலையில் தொடர் நீர்வரத்து காரணமாக நேற்று காலை நீர்மட்டம் 50 அடியை எட்டியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், அணையிலிருந்து 3 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. கோவை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக 112 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்படுகிறது என்று பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் விநியோகத்தில் இனி பிரச்சினை இருக்காது. தேவையான அளவு குடிநீர் கிடைக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

- ஆர்.கிருஷ்ணகுமார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close