[X] Close

சென்னை மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்


fish-samples-in-chennai-test-positive-for-formalin

படம்: எம்.கருணாகரன்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jul, 2018 13:56 pm
  • அ+ அ-

சிறு பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயிலிருந்து மீண்டு வருபவர்கள் என அனைவருக்கும் உகந்த உணவு மீன்கள் என்றுதான் மருத்துவர்களே பரிந்துரை செய்வார்கள். ஆனால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 30 வகை மீன்களில் 11 வகை மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மலின் எனும் வேதிப்பொருள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மீன்களைப் பதப்படுத்துவதற்காக இந்த ஃபார்மலின் ரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு பகுதிகளில் இருந்து வாங்கப்பட்ட மீன்கள் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சோதனை செய்யப்பட்டது. ஃபார்மலின் படிமம் இருக்கிறதா எனக் கண்டறிய இந்த அரசுப் பல்கலைக்கழகத்தில் குறைந்த செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சிந்தாதிர்ப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை மீன் சந்தைகளீல் ஜூலை 4 மற்றும் 8-ம் தேதிகளில் வாங்கப்பட்ட மீன்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 13 மாதிரிகளில் ஒரே ஒரு மாதிரியில் மட்டுமே ஃபார்மலின் இருந்தது.

ஆனால், ஜூலை 8-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மற்றும் காசிமேட்டில் வாங்கப்பட்ட 17 வகையிலான மீன்களில் 10 மாதிரிகளீல் ஃபார்மலின் இருந்தது.

ஃபார்மலின் என்ன செய்யும்?
ஃபார்மலின் என்பது கண்கள், தொண்டை, தோல் மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். நீண்ட காலமாக ஃபார்மலின் கலந்த மீன்களை உட்கொண்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும். கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அதிகபட்சமாக புற்றுநோய் உண்டாகும்.

தமிழகத்தில் இதுவே முதன்முறை?
தமிழகத்தில் மீன்களில் ஃபார்மலின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டாப்பாட்டு ஆணைய அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு துறைமுகங்களிலும் மீன் சந்தைகளில் சோதனைகள் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலிருந்து பெறப்படும் மீன்களில் ஃபார்மலின் இருப்பதாக கேரள மாநிலம் புகார் தெரிவித்ததையடுத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

நடவடிக்கை பாயும்?
இது குறித்து மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், "மீன்களைப் பதப்படுத்த ஃபார்மலினைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. தூத்துக்குடி மற்றும் சில இடங்களிலும் ஃபார்மலின் பயன்பாடு குறித்த சோதனை நடைபெற்றது. இப்போது தி இந்து நாளிதழில் பரிசோதனை முடிவுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதால், இதே மீன் மார்க்கெட்டுகளில் இருந்து மீன்களைப் பெற்று சோதனை நடத்தவுள்ளோம். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சோதனை முடிவுகள்..
பன்னா, கிழங்கான், பாறை ஆகிய மீன் களில் 20 பார்ட்ஸ் பெர் மில்லியன் (parts per million) என்ற வீதத்தில் ஃபார்மலின் இருக்கிறது. சுறா, ஆக்டோபஸ், ஏரி வாவல், ஒட்டு கனவா, பேய்க்கனவா, கெழுத்தி ஆகிய மீன்களில் 5 பார்ட்ஸ் பெர் மில்லியன் என்ற வீதத்தில் ஃபார்மலின் இருக்கிறது.

எப்படி சோதிக்கப்படுகிறது?
சோதனை முறை குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ஃபெலிக்ஸ், "ஃபார்மலின் மிகவும் காத்திரமான ரீஏஜன்ட். இந்த சோதனையை மேற்கொள்ள 10 நிமிடங்களே ஆகின்றன. இந்த சோதனையைச் செய்ய மாதிரி மீனிலிருந்து 2 கிராம் தசை வெட்டி எடுக்கப்படுகிறது. அதை 4 மி.லிட்டர் கரைப்பானில் சேர்த்து நன்கு குலுக்கப்படுகிறது. அப்படிச் செய்யும்போது ஃபார்மலின் கரைப்பானுடன் சேரும். பின்னர் இந்த கரைப்பான் ரீஏஜன்ட் அடங்கிய புட்டியில் ஊற்றப்படும். அப்போது அந்த ரீஏஜன்ட் மஞ்சள் நிறமாக மாறினால் அந்த மீனில் ஃபார்மலின் இருப்பது உறுதியாகும்" என்றார்.

செவுள்களை சிவப்பாக வைக்கும் ஃபார்மலின்..
மீன் வாங்குபவர்கள் மீன்களின் செவுள்களைப் பார்த்தே வாங்குகின்றனர். செவுள் சிவப்பாக இருந்தால் மீன் ஃபிரெஷ்ஷாக இருக்கிறது என்பது அர்த்தம். ஆனால், ஃபார்மால்டிஹேட் என்ற ஃபார்மலினை மீன் செவுளில் செலுத்தும்போது அவை நீண்ட நாட்களுக்கு சிவப்பாக இருக்கும். இதனால், மீன் விற்பனையாளர்கள் நீண்ட நாட்களுக்கு பழைய மீனை புதுசு போன்று விற்று லாபம் ஈட்டமுடியும்.

- தீபா ஹெச்.ராமகிருஷ்ணன்

 

இதையும் படியுங்கள்: ஃபார்மலின் கலப்பு கடைசி மீனவனையும் பாதிக்கும்: மீனவர் சங்கத் தலைவர் வேதனை

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close