[X] Close

 புதுப்பொலிவு பெறும் மலைக்கோட்டை, தெப்பக்குளம்:  ரூ.42 கோடியில் பணிகள் விரைவில் தொடக்கம்


smart-city-trichy-plans

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெற உள்ள பல வண்ண ஒளியுடன் மலைக்கோட்டை, புதுப்பொலிவுடன் தெப்பக்குளம்,

  • kamadenu
  • Posted: 09 Jul, 2018 13:03 pm
  • அ+ அ-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் 6 இடங்களில் ரூ.42 கோடியில் திருச்சியின் வரலாற்றை விளக்கும் வகையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு தலா ரூ.500 கோடி வீதம் ரூ.1,000 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதில், மலைக்கோட்டை, தெப்பக்குளம், போர் நினைவுச்சின்னம் ஆகியவற்றை அவற்றின் தொன்மையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேம்படுத்தி மின்னொளியில் ஒளிரச் செய்தல், மெயின்கார்டு கேட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை களையும் வகையில் உணவகத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடம் கட்டுதல், திருச்சி மற்றும் பல்வேறு பேரரசுகளின் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குழந்தைகள் பூங்காவுடன் கூடிய புராதன பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முதல்கட்டமாக ரூ.42 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.

மலைக்கோட்டை

மலைக்கோட்டையின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், பல வண்ணங்களில் மின்னொளியால் மலைக்கோட்டை ஒளிரச் செய்யப்பட உள்ளது.

மலைக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நிலவும் வாகன நெருக்கடி, நிறுத்துமிட பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தரை மற்றும் 2 தளங்களில் உணவகம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுடன் கூடிய முனிசிபல் சத்திரம் கட்டப்பட உள்ளது.

மெயின்கார்டு கேட்

மலைக்கோட்டைக்கு அடுத்து திருச்சியின் பிரதான அடையாளமாக விளங்குவது மெயின்கார்டு கேட் என்றழைக்கப்படும் பெரிய கதவுகளுடன் கூடிய மலைக்கோட்டை நுழைவுவாயில். இந்தப் பகுதியை மேம்படுத்தி, பல வண்ண மின்னொளி வசதிகள் செய்யப்பட உள்ளன.

தெப்பக்குளம்

மலைக்கோட்டை தெப்பக்குளத்தின் நடுவே ஒலி-ஒளிக் காட்சி, இதை பொதுமக்கள் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் தெப்பக்குளத்தைச் சுற்றி படிகள், தெப்பக்குள சுற்றுச்சுவரில் சுவர் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், தெப்பக்குளத்தைச் சுற்றி நடைபாதை ஆகியன அமைக்கப்படவுள்ளன.

புராதன பூங்கா

பட்டவொர்த் சாலையில் உள்ள மேடான இடத்தில் புராதன பூங்கா அமைக்கப்படவுள்ளது. குழந்தைகள் பூங்காவுடன், புராதன வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் திருச்சி நகரின் வரலாற்றை விளக்கும் சிலைகள் மற்றும் பல்வேறு பேரரசுகள், மன்னர் கால வரலாறுகள், வரலாற்றுச் சுவரோவியங்கள் இந்தப் பூங்காவில் இடம் பெறவுள்ளன.

போர் நினைவுச் சின்னம்

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற திருச்சி வீரர்களை நினைவு கொள்ளவும், பெருமைப்படுத் தும் வகையிலும் காந்தி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ளது போர் நினைவுச் சின்னம்.

இதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தேசியக் கொடி நிறத்தில் மின்னொளியால் ஒளிரச் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வட்டாரங்களில் கேட்டபோது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.42 கோடியில் இந்த 6 பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. 

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள மலைக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இலகுவான போக்குவரத்து, மகிழ்ச்சியான பொழுதுபோக்கு கிடைக்கும்” என்றனர்.

-  ஜெ.ஞானசேகர்

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close