[X] Close
 

மாநகராட்சி சொத்து வரிவிதிப்பில் ரூ.400 கோடி ஊழல்: சிபிஐக்கு புகார் அனுப்பியவர் யார்?


video-subramniyam

  • kamadenu
  • Posted: 07 Jul, 2018 14:56 pm
  • அ+ அ-

கா.சு.வேலாயுதன்

---

திருப்பூர் மாநகராட்சியில் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடப்பதாக, குறிப்பாக சொத்துவரிவிதிப்பில் நடந்த முறைகேட்டில் மட்டும் ஆண்டுக்கு ரூ.40 கோடி வரி ஏய்ப்பு நடப்பதாக சிபிஐக்கு ஒரு புகார் கடிதம் பதிவு தபாலில் சென்றுள்ளது. அது சென்ற வேகத்தில் சரியான முகவரி குறிப்பிடாததால் திரும்பி வந்துள்ளது. ‘அது அனுப்பியவருக்குத்தான் திரும்பி வர வேண்டும். ஆனால் எனக்கு திரும்பி வந்துள்ளது. இப்படியொரு கடிதத்தை நான் அனுப்பவேயில்லை. ஆனால் என் பெயரில் யாரோ இதை எழுதியிருக்கிறார்கள். அந்த போலி நபரை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் என் உயிருக்கே ஆபத்து!’ என திருப்பூர் மாநகர போலீஸ் ஆணையாளருக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார் ஒருவர். அவர் வீடியோ சுப்பிரமணியம்.

லஞ்ச அதிகாரிகளை கையும் களவுமாக வீடியோ படம் பிடித்து திருப்பூரில் அம்பலப்படுத்தி வந்தவர்தான் வீடியோ சுப்பிரமணியம். வணிகவரித்துறை அதிகாரிகள் முதற்கொண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அந்நிய செலாவணி மோசடிகள் வரை இப்படி இவர் அம்பலப்படுத்தி இருப்பது ஏராளம். அப்படிப்பட்டவர் சில ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லாமல் மீடியா வெளிச்சத்திற்கு வராமல் இருந்த நிலையில்தான் சமீபத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் ஆணையருக்கு இப்படியொரு புகாரை அனுப்பியிருக்கிறார். அந்த புகாருடன் தனக்கு வந்த திரும்பி வந்த 10 பக்க புகார் மனு காப்பியையும் இணைத்துள்ளார்.

அந்த மனுவில் வருவாய்த்துறை உயர் அதிகாரியாக பணியில் இருந்த ஒருவர் 15 ஆண்டுகளாக திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி நிர்ணயப்பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், அவர் மாநகராட்சி முக்கிய பதவி ஒன்றில் இருந்த அரசியல்புள்ளி ஒருவருக்கு உதவியாளராகவும் 5 ஆண்டுகளாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அலுவலர் மட்டும் இதுவரை நான்கு நகராட்சி/மாநகராட்சி ஆணையரிடம் பணிபுரிந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டு, அந்த ஆணையர்கள் இவர் மூலம் எத்தனை கோடிகள், எந்தந்த வகையில் லஞ்சமாக பெற்றனர் என்பதும் கோடி காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக சில ஆண்டுகள் முன்பு பணிபுரிந்த 100 துப்புரவு பணியாளர்களிடம் சுகாதாரப்பணியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவி உயர் பெற தலா ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், அதில் லஞ்சம் தந்த 37 பேருக்கு மட்டும் பதவி உயர்வு தந்து விட்டு, மீதியுள்ளவர்களை துப்புரவு பணியாளர்களாகவே வைத்துள்ளனராம். சில ஆண்டுகளுக்கு முன்பு 900 துப்புரவு பணியாளர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டது. அவர்கள் ரூ.5 லட்சம் லஞ்சம் தந்தால் வேலை என நிர்ணயம் செய்யப்பட்டது. அதை ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ஒருவர் முறைகேடுகளை கண்டுபிடித்து நிறுத்த, விவகாரம் சென்னை வரை சென்றது. 900 பேருக்கு பணி ஆணை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி வருடத்திற்கு சுமார் ரூ.47 கோடிதான் வசூலாகிறது. ஆனால் சொத்து வரியை சரியாக நிர்ணயம் செய்தால் மாநகராட்சி சொத்து வரி வருட வருமானம் ரூ.400 கோடியை தாண்டி விடும். உதாரணத்திற்கு திருப்பூரை சேர்ந்த டிராவல்ஸ் முதலாளி ஒருவர் 3 லட்சம் சதுர அடியில் (முகவரி குறிக்கப்பட்டுள்ளது) கம்பெனி கட்டியுள்ளார். அதற்கு முறைப்படி வரி நிர்ணயம் செய்திருந்தால் ரூ.20 லட்சத்திற்கு மேல் வரும். ஆனால் இதற்கு ரூ.7 ஆயிரம் மட்டுமே வரி விதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி செய்ய மட்டும் கட்டிட உரிமையாளரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார்கள். இதே மாதிரி மட்டும் 30 ஆயிரம் பெரிய கட்டிடங்கள் (18 நிறுவனங்கள் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது) பெரிய அளவில் வரி ஏய்க்கப்பட்டுள்ளது. இதேபோல் மருந்து வாங்குவது, மாநகராட்சி தளவாடங்கள் வாங்குவது எல்லாவற்றிலும் ஊழல்தான். இந்த முறைகேட்டின் மூலம் மட்டும் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ரூ.900 கோடி வரை சொத்து சம்பாதித்துள்ளதாகவும் மனுவில் புகார் பட்டியல் நீளுகிறது.

இதைப் பற்றி வீடியோ சுப்பிரமணியத்திடம் பேசியபோது, ‘வணிகவரித்துறை, போலீஸ், மின்வாரியம், பி.எஸ்.என்.எல், வட்டாரப் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் நடக்கும் ஊழல், லஞ்ச விவகாரத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறேன். வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறேன். அவையெல்லாமே பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வந்து புகார் சொல்லும்போது மட்டுமே கையில் எடுத்திருக்கிறேன். திருப்பூர் மாநகராட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறதுன்னு வந்து பல பேர் சொல்லுவாங்களேயொழிய யாரும் பாதிக்கப்பட்டு எங்கிட்ட வந்து நின்னதில்லை. நானும் அவங்களுக்காக லஞ்சத்தை பிடிக்க இறங்கியதில்லை. இப்படியிருக்கும்போது என் பெயரில் யாரோ திருப்பூரில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்களின் பெயரையெல்லாம் (இந்த நிறுவன உரிமையாளர்கள் பெரும்பாலும் போலீஸ்  உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பவர்களுமாம்) பட்டியல் போட்டு சிபிஐ வரை புகார் அனுப்பியிருக்காங்கன்னா ஒரே சமயத்தில் நான் எத்தனை பேரின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும்?

அது மட்டுமல்ல, நான் என்றைக்கும் புகார் கடிதத்தை வேறு பெயரிலோ, மொட்டைக் கடிதமாகவோ அனுப்பவும் மாட்டேன். இந்த மனுவில் என் பெயர் முகவரி சரியாக இருந்தாலும், கையெழுத்து என்னுடையதில்லை. தவிர மனுவில் ஓரிடத்தில், ‘மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, மூக்குக்கவசம் முதலிய சுகாதார தற்காப்பு அணிகலன்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எங்கள் இனத்தில் உள்ள 5 வது முதல் 10வது வரை படிப்பு படித்துள்ளவர்களை இதற்கு முன்னால் பணியில் அமர்த்தியது போல் எங்களையும் பில் கலெக்டர்களாகவும், அலுவலக பணியாளர்களாகவும் பணியமர்த்துமாறு தாழ்மையுடன் தங்கள் பொற்பாதங்கள் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்!’ என வருகிறது.

‘என் அப்பன் குதிருக்குள்ளே இல்லை’ என்கிறாப்பல இல்லை இது இருக்கு. பாதிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் நேரடியாக தங்கள் பெயரை வெளியிட பயந்து என் பெயரை பயன்படுத்தியதாகவே தெரிகிறது. இதைப் பற்றி நான் போலீஸ் ஆணையருக்கு புகார் அனுப்பிய தேதி 21.12.2017 ஆகும்.  நான் எனக்கு தெரிந்த மாநகராட்சி அலுவலர்களிடம் விசாரித்ததில் அங்கே இப்படி ஊழல் நடப்பதெல்லாம் உண்மைதான். என்கிறார்கள். என் கடிதத்தின் மீது போலீஸூம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சியில் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. என்னதான் இங்கே நடக்கிறதோ?’ என்றார் வேதனையுடன்.

இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராக அப்போது பணியாற்றிய நாகராஜனிடம் கேட்டபோது, ‘அப்படியொரு புகார் கடிதம் என் பார்வைக்கு வரவில்லை. ஏ.சி. இன்ஸ்பெக்டர் லெவல் அலுவலர்களின் பார்வையில் விசாரணை சென்றிருக்கலாம். விசாரிக்கிறேன்!’ என தெரிவித்தார்.




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close