[X] Close

வெள்ளகோவிலில் இரும்புத் தாது சுரங்கம் அமைக்க திட்டம்?


iron-ore-mining

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மத்திய அரசின் நிறுவனம் ஆய்வு மேற்கொண்ட திருமண்கரடு பகுதி.

  • kamadenu
  • Posted: 07 Jul, 2018 12:32 pm
  • அ+ அ-

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் இரும்புத் தாது சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஆய்வு செய்ததற்கு, கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதுதொடர்பாக வெள்ளகோவில் பச்சபாளையம் ஊராட்சி பூசாரிவலசு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது: 

வெள்ளகோவில் பகுதியில் இரும்புத் தாது இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மத்திய அரசின் இரும்புத் தாது நிறுவனமான குதிரைமுக் (Kiocl), திருமண்கரடு பகுதியில் இதுவரை இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுக்கு மத்திய அரசு தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 3-வது முறை துளையிட்டு ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்நிறுவனத்திடமும் கோரிக்கை மனுவும் அளித்தோம். 

இரும்புத் தாது சுரங்கம் அமைக்கும்போது, எங்கள் பகுதியில் சுமார் 100 கி.மீ. சுற்றளவுக்கு ஆராய்ச்சி நடக்கலாம் என தெரிகிறது. இதனால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேரடி பாதிப்பை சந்திக்கும். முதலில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர், மண் வளம், காற்று மாசுபாடு என பல்வேறு பிரச்சினைகள் பின்தொடரும்.

திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., கீழ்பவானி பாசனம் என இரண்டையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும்.

 விவசாயத்தை நம்பியுள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதுடன், ஆடு, மாடு வளர்ப்பும் அழிந்துவிடும். குடும்பங்களுடன் பிழைப்பு தேடி வேறு இடத்துக்கு செல்ல நேரிடும். இவ்வாறு அவர் கூறினார். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இரும்புத் தாது வளம் இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், இப்பகுதியிலுள்ள கரடுகளில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். 

கவனஈர்ப்பு தீர்மானம்

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘கடந்த வாரம் முதல்வர் சேலம் வந்தபோது, வெள்ளகோவிலில் இரும்புத் தாது சுரங்கம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் காங்கயம் எம்எல்ஏ உ.தனியரசு கொண்டுவந்துள்ளார். இதற்கு பதிலளித்த சட்டம் மற்றும் கனிம வளத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றார். இரும்புத் தாது சுரங்கம் அமைக்கும்பட்சத்தில், நிலத்தடி நீர் தொடங்கி விவசாயம், காற்று மாசுபாடு வரை கடும் பாதிப்புக்கு ஆளாகி கிராமங்களை காலி செய்ய நேரிடும்’ என்றனர். 

வாய்ப்பு இல்லை

திருப்பூர் மாவட்ட கனிம வள உதவி இயக்குநர் சட்டநாதன் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘கனிமம் இருக்கும் இடங்களில் மத்திய அரசின் நேஷனல் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் டிரஸ்ட் சார்பில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். பெருவகை மற்றும் சிறுவகை கனிமம் குறித்து, மத்திய அரசின் குதிரைமுக் இரும்புத் தாது நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. 

எங்கெங்கு எந்த வகை கனிமம் உள்ளது என்பதை நேஷனல் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் டிரஸ்ட் ஆராய்ச்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெள்ளகோவில் பகுதியிலும் ஆய்வு செய்துள்ளனர். இதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை. மேற்கண்ட குழுவினர், மாதிரி சேகரித்து ஆய்வு மட்டும் செய்வார்கள். கடந்த 19-ம் தேதியுடன் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அங்கு கிடைக்கும் இரும்புத்தாது சுமார் 30 சதவீதம் மட்டுமே சுத்தமாக இருப்பதாக தெரிகிறது. எனவே, தற்போதைய சூழலில் அங்கு இரும்புத் தாது சுரங்கம் அமைக்க வாய்ப்பு இல்லை’ என்றார்.

- இரா.கார்த்திகேயன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close