[X] Close
 

பிஸ்கட், சாக்லேட் கவர்களை  நிறுவனங்களுக்கு அனுப்பிய மாணவியர்:  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக கடிதம்


environmental-awareness

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் தாங்கள் சேகரித்த பிஸ்கட், சாக்லேட் கவர்களை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர்.

  • kamadenu
  • Posted: 06 Jul, 2018 12:09 pm
  • அ+ அ-

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட், சாக்லேட் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பும் புதிய திட்டம் தூத்துக்குடியில் நேற்று தொடங்கப்பட்டது. 20 ஆயிரம் கவர்களை பள்ளி மாணவியர் அனுப்பினர்.

ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சியை பிளாஸ்டிக் அற்ற பகுதியாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிஸ்கட் மற்றும் சாக்லேட் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

பிஸ்கட் மற்றும் சாக்லேட் கவர்கள், ஒரு முறை பயன்படுத்தும் மெல்லிய பாலித்தீனால் ஆனவை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்திட்டம் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல்படுத்தப்பட்டது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் 360 மாணவியர், ஜூன் 20-ம் தேதி முதல் தங்கள் வீட்டில் சேரும் பிஸ்கட், சாக்லேட் கவர்களை சேகரித்து பள்ளிக்கு கொண்டு வந்தனர்.  ஜூலை 4-ம் தேதி வரை 20,244 கவர்களை சேகரித்தனர்.

திருப்பி அனுப்ப ஏற்பாடு

இந்த கவர்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பும் நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. பிரிட்டானியா (10,660 கவர்கள்), ஐடிசி (3,420), நபாட்டி (3,412), நெஸ்லே (1,818), காட்பரி (934) ஆகிய 5 நிறுவனங்களின் கவர்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிறுவனங்களுக்கு கடிதம்

இந்த கவர்களுடன் மாணவியரின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. அதில், 'உங்கள் நிறுவனத்தின் பிஸ்கட், சாக்லெட் கவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. இவற்றுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கவர்களை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட் டுள்ளது. 

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் எஸ்.வினோத் ராஜா, செயற்பொறியாளர் ஆர்.ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல், கலந்து கொண்டனர்.

 நாட்டிலேயே முதல் முறை

மாநகராட்சி ஆணையர் கூறும்போது, ‘‘பிஸ்கட், சாக்லேட் கவர்களை, அதனை தயாரித்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பும் நிகழ்வு நாட்டிலேயே இது தான் முதல் முறை. பிஸ்கட், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலித்தீ்ன் கவர்கள் யன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தற்போது முதல் கட்டமாக சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவியர் சேகரித்த கவர்கள் அனுப்பப்படுகிறது. இதபோல் இங்குள்ள மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிஸ்கட், சாக்லேட் கவர்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த கவர்களும் திருப்பி அனுப்பப்படும். இந்த நிறுவனங்கள் தங்கள் முறையை மாற்றும் வரை அனுப்புவோம்.

மாநகராட்சி சார்பில் பல்வேறு அறிவிப்புகள் பிளக்ஸ் போர்டுகளாக வைக்கப்பட்டுள்ளன. அவைகளை முழுமையாக அகற்றிவிட்டு, இனிமேல் துணியால் ஆன பேனர்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்’’ என்றார் அவர்.

-  ரெ.ஜாய்சன்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close