[X] Close

பசுமை வழி சாலை திட்டம் அவசியமானது:  சென்னை உயர் நீதிமன்றம் கருத்து


court-on-salem-highway

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 06 Jul, 2018 12:02 pm
  • அ+ அ-

பசுமை வழிச் சாலை திட்டத்தின் நோக்கம் தெரியாமல் அதை எதிர்க்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதற்காக ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கே.வி.சுசீந்திரகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது:

சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைக்காக நிலஆர்ஜிதம் செய்வதைக் கண்டித்து சேலம் சாத்தூர் மாரியம்மன் கோயில் திடலில் ஜூலை 8-ம் தேதி எங்களது கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக பொதுமக்கள் மத்தியில் விளம்பரம் செய்து பிட்நோட்டீஸ்கள் அடித்து விநியோகம் செய்துள்ளோம்.

இந்தக் கூட்டத்துக்கு முறைப்படி அனுமதி கோரி கடந்த ஜூன் 18-ம் தேதியே ஓமலூர் காவல் ஆய்வாளரிடம் மனு கொடுத்தும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. அதையடுத்து ஜூன் 28-ம் தேதி மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்தும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, ஜி.கே.வாசன் தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இதுபோன்ற வழக்கை எவ்வாறு தாக்கல் செய்கின்றனர் என தெரியவில்லை. இந்த வழக்கை ஊக்குவிக்க முடியாது. தமிழக அரசு இப்போதுதான் முதன்முறையாக சேலத்தில் இருந்து சென்னைக்கு எட்டு வழிகள் கொண்ட பசுமை வழிச் சாலை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டமானது பட்டி, தொட்டி முதலான கிராமங்களை பெருநகரங்களுடன் இணைக்கும். மேலும் போக்குவரத்து காலதாமதத்தையும் வெகுவாக குறைக்கும்.

இதன்மூலம் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முன்வருவர். அந்த நிறுவனங்களின் சரக்குகளை தாமதமின்றி எடுத்துச் செல்ல இந்த 8 வழிச் சாலை அவசியமான ஒன்று. இளைஞர்களுக்கும் பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு உருவாகும்.

இதுபோன்ற மிகப்பெரிய திட்டத்தை தமிழக அரசு மாநிலத்தின் நலன் கருதி கொண்டு வரும்போது, அதற்கு எதிர்மறையான கண்டன பொதுக்கூட்டங்களை தவிர்க்க அரசியல் கட்சியினர் முன்வர வேண்டும். பசுமை வழிச் சாலை திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்ளாமலும், அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமலும் பொத்தாம் பொதுவாக எதிர்க்கக் கூடாது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்டபோது அவர்களும் இந்த திட்டத்தை வெகுவாக வரவேற்றனர்.

அப்போது ஒரு வழக்கறிஞர் இதற்காக நிலஆர்ஜிதம் செய்யாமல் பறக்கும் சாலையாக அமைத்தால் யாருக்கும் தொந்தரவு இருக்காது என அவரது கருத்தை தெரிவித்தார். ஆனால், அது சாத்தியமா என தெரியாது. எனவே, பசுமை வழிச் சாலை திட்டத்தின் நோக்கம் தெரியாமல் அதை எதிர்த்து நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close