[X] Close

‘குட்கா’ பொருட்களின் கூடாரமாகிறதா கோவை? - 7 மாதங்களில் 5 டன் பறிமுதல் 


coimbatore-gutka-sales

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் | கோப்புப் படம்: ஜெ.மனோகரன்

  • kamadenu
  • Posted: 05 Jul, 2018 11:35 am
  • அ+ அ-

கடந்த 7 மாதங்களில் 5 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், குட்கா போதைப் பொருட்களின் கூடாரமாக கோவை மாறி வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சமீப காலமாக, தமிழகத்தில் அனைத்து தரப்பினராலும் பேசுபொருளாக குட்கா போதைப் பொருட்கள் மாறி இருப்பதற்கு, 2013-ம் ஆண்டு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டும், தற்போது தடையின்றி கிடைப்பதும், விற்கப்படுவதுமே காரணம். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தயாரிப்புச் சட்டத்தின் கீழ் (கோப்பா) ஆங்காங்கே பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தன. ஆனால், தற்போது டன் கணக்கில் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 

கோவையை அடுத்த சூலூரில் ரகசியமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை, கடந்த ஏப்.27-ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.78.5 லட்சம் மதிப்பிலான 648 கிலோ குட்கா, பான்மசாலா மற்றும் அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான ஆலை உரிமையாளர் அமித் ஜெயினை, தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

வெளிநாட்டுக்கு தப்பியோடியதால் அவரை கைது செய்ய, தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது போலீஸ் தரப்பு. 

வழக்கு முடிவில் அழிக்கப்படும்

கோவை மாவட்டத்தில் குட்கா பொருட்கள் பறிமுதல் நடவடிக்கை குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் பி.விஜயலலிதாம்பிகை கூறியதாவது: 

உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வரும் புகார்களின் அடிப்படையில், கோவையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் முதல் நேற்று முன்தினம் (ஜூலை 2) வரையிலான கால கட்டத்தில், 5 டன் குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம். பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்கள், ‘சீல்’ வைத்து மூடப்பட்டுள்ளன. 

சம்பந்தப்பட்டவர்கள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வழக்குகள் முடிவுக்கு வரும்போது, அனைத்தும் அழிக்கப்படும்.

எது குட்கா? எது பான்மசாலா?

பெங்களூரு, டெல்லி ஆகிய பகுதிகளில் குட்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்படுகின்றன. ஹான்ஸ், கூல் லிஃப், கணேஷ், எஸ்.டி.பி. ஆகிய நிறுவன தயாரிப்பு குட்கா பொருட்களை பதுக்கிவைக்கும் கும்பல், 3 முதல் 4 அட்டைப் பெட்டிகளை வைத்து, அதற்கு மேல் பிளாஸ்டிக் உரையிட்டு காற்று புகாதவாறு பேக்கிங் செய்து வைக்கின்றனர். இதனால், அதன் வாசனை வெளியில் வருவது இல்லை. புகையிலை சேர்க்கப்பட்ட பொருள் குட்கா, புகையிலை சேர்க்கப்படாத பொருள் பான்மசாலா என அழைக்கப்படுகிறது. 

புற்றுநோயாக மாறும்

தொழிலாளர்கள் மத்தியில், குட்கா புழக்கம் அதிகம் காணப்படுகிறது. வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகவும், நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டி இருப்பதாலும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர். இதைப் பயன்படுத்துவதால் வாயின் உட்பகுதி பாதிக்கப்பட்டு, முதலில் புண்கள் தோன்றி நாளடைவில் புற்றுநோயாக மாறிவிடும். இதனால், உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு இறக்க நேரிடும். 

குட்காவுக்கு அடிமையானவர்கள், அதில் இருந்து மீண்டு வர வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, உணவுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும், காவல்துறையுடன் இணைந்து சந்தேகத்துக்கு இடமான பகுதிகளில் சோதனை நடத்த உள்ளோம். 

விரைவில், கோவை மாவட்டத்தில் இருந்து முழுமையாக குட்கா போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

கண்காணிப்பில் எல்லைகள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி கூறும்போது, ‘கோவை மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, சந்தேகத்துக்கு இடமான வழித்தடங்கள் போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன. சட்டவிரோதமாக குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டுவருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

-  .சத்தியசீலன்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close