[X] Close

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக  மீம்ஸ் உருவாக்கியவர் கைது


meme-creator-arrest

  • kamadenu
  • Posted: 05 Jul, 2018 11:33 am
  • அ+ அ-

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு மீம்ஸ் உருவாக்கிய இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். சேத்துப்பட்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் விவசாய நிலங்களில் கற்களை நடும் பணி நடந்தது.

சென்னையில் இருந்து சேலத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்கப்படவுள்ளது. 5 மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ தொலைவு அமைக்கப்படும் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், போலீஸார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தத் திட்டத்துக்காக அதிகப்படியான தொலைவு தி.மலை மாவட்டத்தில் இருந்து நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. 

தி.மலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், செங்கம் உள்ளிட்ட தாலுகாவில் 122 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கப்படவுள்ளது. பசுமை வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தி.மலை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று செங்கம் தாலுகாவுக்கு உட்பட்ட முத்தனூர், முடியனூர், கொட்டகுளம் உள்ளிட்ட கிராமங்களில் வருவாய்த் துறையினர் அளவீடு செய்யப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். 

இந்நிலையில் நேற்று சேத்துப்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட நாச்சாவரம், கரிப்பூர், கொத்தண்டவாடி, உலகம்பட்டு, மப்பேடு, கங்கைசூடாமணி, தத்தனூர், செம்மாம்பாடி, கோணாமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நில அளவீடு பணி நடந்தது. 

நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் விவசாயிகளின் நிலங்களில் கற்களை நட்டனர். கோணமங்கலம் கிராமத்தில் தனது 2 ஏக்கர் நிலத்தில் கற்களை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார்த்தசாரதி என்பவர் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி தனியாக அழைத்துச் சென்றனர். 

வதந்தி பரப்பியவர் கைது 

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மலை பெரியார் சிலை அருகே இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் திரள வேண்டும் என்று வாட்ஸ்-அப்பில் தகவல் பரப்பப்பட்டது. 

இது தொடர்பான புகாரின்பேரில் தி.மலை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த 29-ம் தேதி விஜயகுமார், மணிவண்ணன், பவுன்குமார் ஆகியோரை கைது செய்தனர். 

இவர்கள், பகிர்ந்த போராட்ட தகவலை உருவாக்கியவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், தி.மலை அடுத்த விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் கதிரவன் (25) என்பது தெரியவந்தது. அவர் உருவாக்கிய மீம்சைத்தான் மூன்று பேரும் பகிர்ந்தது தெரியவந்தது. அவரை, போலீஸார் நேற்று கைது செய்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close