[X] Close

ரயில்களில் நீரிழிவு நோயாளிகளுக்கான தனி உணவு கிடைக்குமா? - பயணிகள் எதிர்பார்ப்பு


train-diabetes-diet-food

ரயில் நிலையங்களில் விற்கப்படும் தரமில்லாத உணவுப் பொருட்களை வேறுவழியின்றி வாங்கி சாப்பிடும் பயணிகள் | (கோப்பு படம்)

  • kamadenu
  • Posted: 05 Jul, 2018 11:29 am
  • அ+ அ-

ரயில்களில் மற்ற பயணிகளுக்கு வழங்கும் டீ, காபி மற்றும் உணவுகளே கிடைப்பதால் அதை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய ரயில்வே 1,27,760 கி.மீ. நீள ரயில் பாதையைக் கொண்ட உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே அமைப்பாகும். 7,500-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய ரயில்நிலையங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு தினமும் 2 கோடி பேர் ரயில்களில் பயணிக்கின்றனர். தற்போது ரயில்வே கட்டமைப்புகளை நவீனமாக்கும் பணிகள் துரிதமாக நடக்கின்றன. ஆனால், ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை இன்னும் முழுமையாக ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக, ரயில்களில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக இல்லை. சுகாதாரமான குடிநீர் இல்லை.

ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதாகவும், ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலை அதிகமாக, தரமின்றி இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதுபோல், ரயில்களில் பயணிகளுக்கான உணவுகள் சாதாரண பயணிகளை மனதில் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், ரயிலில் பயணிக்கும் குறிப்பிட்ட சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள். அவர்களுக்கான உணவுகள் ரயில்களில் கிடைப்பதில்லை. 


கே. பத்மநாதன்

இதுகுறித்து தென்னக ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் கே.பத்மநாதன் கூறியதாவது: ‘‘இந்திய மருத்துவக் கவுன்சில் அறிக்கைப்படி 62 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் வயது வித்தியாசமின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள். சராசரி கணக்குப்படி 42 வயதுக்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் (10 லட்சம் பேர்) நீரிழிவு நோயால் மரணம் அடைகிறார்கள். 

ரயில்களில் பயணம் செய்வோர் காலை, பகல், இரவு நேரங்களில் புறப்பட்டு அடுத்த நாளோ அல்லது 8 மணி நேரம் முதல் 24 மணி நேரம், 96 மணி நேரம் வரை நீண்ட தூரம் பயணம் செய்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கிறார்கள்.

இந்த பயணிகள் ரயிலை விட்டு கீழே இறங்கி ஓய்வு எடுக்க வாய்ப்பில்லை. சாவகாசமாக சாப்பிடவும் நேரம் கிடைப்பதில்லை. இவர்களுக்கு ரயில்களில் மற்ற பயணிகள் குடிக்கும் டீ, காபி, பால் போன்றவையே வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர்களால், ரயிலில் ஒரு நாள் முதல் 4 நாள் வரை பயணிக்கும் பட்சத்தில் தொடர்ந்து சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அபாயகரமாக உயர்ந்து உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. பலர் ரயில்களிலேயே இறந்துவிடும் பரிதாப நிலை நேரிடுகிறது.

அதனால், இந்திய ரயில்வே நிர்வாகம், ரயில்களில் பயணிக்கும் மக்களுக்காக சர்க்கரை இல்லாத டீ, காபி, பால் வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ரயில்களில் பயணிக்கும் நீரிழிவு நோயாளிகள் முன்வைக்கும் நீண்ட காலக் கோரிக்கை. ரயில் பயணிகளின் உடல் நலனில் ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும். ரயில் நிலைய ஸ்டால்கள், ஹோட்டல்களிலும் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு வகைகளை குறிப்பிட்ட அளவு தினமும் தயார் செய்து வழங்க வேண்டும். அந்த உணவு மீதமாகி கெட வாய்ப்பில்லை. ஏனெனில் ரயில்களில் பயணிக்கும் பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயாளிகளாக இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close