[X] Close
 

குடியிருப்புகள் இல்லாமல் பரிதவிக்கும் பழங்குடியினர் 


tribal-housing

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வீடுகள்

  • kamadenu
  • Posted: 03 Jul, 2018 11:49 am
  • அ+ அ-

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மலைக் கிராமங்களில், மண்சுவர் கட்டிடத்தில் தகர கூரை வேய்யப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகள் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களுக்கு உட்பட்ட சர்க்கார்பதி, நாகர் ஊத்து, எருமைபாறை, நவமலை, கீழ்பூனாட்சி, சின்னாறுபதி, தம்மம்பதி, மரப்பாலம், வெள்ளிமுடி, கோழிகமுத்தி, வில்லோனி, கூமாட்டி உள்ளிட்ட 16 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு மலசர், மலைமலசர், முதுவர், காடர், புலையர், மலையாளி பிரிவுகளைச் சேர்ந்த 6000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

இந்த மலைக்கிராமங்களுக்கு மருத்துவ வசதிகள், பொதுக்கழிப்பிடம், சாக்கடை வசதி, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. ஒரு சில கிராமங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகளின் கூரைகள் பெயர்ந்தும், சுவர்கள் விரிசல் அடைந்து இடிந்து விழும் நிலையிலும் உள்ளன.

பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னாறுபதி கிராமம் வால்பாறை சாலையின் அருகில் உள்ளது. இந்த கிராமத்தில் மலைமலசர் பிரிவைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான பழங்குடியின குடும்பங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மண் சுவரின் மீது தகர கூரை வேய்ந்த வீடுகளிலும்,பல குடும்பங்கள் ஓலை குடிசைகளிலும் வசித்து வருகின்றன. 

இது குறித்து பழங்குடியின மக்கள், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘கடந்த 50 ஆண்டுகளாக இந்த கிராமத்துக்கு குடிநீர், மருத்துவம், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை. 

மண்ணால் கட்டப்பட்ட சுவர் மீது தகர கூரை போட்டு குடியிருக்கிறோம், காற்று அடித்தால் தகரம் பறந்து விடுகிறது. மழையில் மண்சுவர் கரைந்து விடுகிறது. எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் குழந்தைகளுடன் இரவில் வீட்டுக்கு வெளியே பாறைகளின் மீது படுத்து உறங்குகிறோம். குடியிருக்க வீடு, குடிக்க நல்ல தண்ணீர், இயற்கை உபாதைக்கு பொதுக் கழிப்பிடம் இதை தான் 50 ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கையாக வைக்கிறோம். இன்றுவரை எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை’ என்றனர். 

மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மலைவாழ் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அதன் ஒருபகுதியாக சின்னாறுபதியில் உள்ள பழங்குடியின குடியிருப்பில், சிறப்பு திட்டத்தில் 25 கான்கிரீட் வீடுகள் கட்டித்தர அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

-  எஸ்.கோபு

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close