[X] Close
 

ஜிஎஸ்டி ஓராண்டு நிறைவு: வரியை குறைக்க குரல் எழுப்பும் தொழில் நிறுவனங்கள்


gst-one-year

கோவை பீளமேடு அருகேயுள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் செயல்படும் சிறு வார்ப்படத் தொழிற்சாலை | படம்: ஜெ.மனோகரன்

  • kamadenu
  • Posted: 03 Jul, 2018 11:37 am
  • அ+ அ-

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வரியைக் குறைக்க வலியுறுத்தி சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தொழில்முனைவோரும், அவர்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும் தீர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள்தான் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, இப்பகுதி பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. ஆனால், ஜிஎஸ்டி அமலாக்கம் இந்த நிறுவனங்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக புகார் உள்ளது.

பெரு நிறுவனங்கள் கெடுபிடி

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களில் சுமார் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பொறியியல் சார்ந்த பல்வேறு உதிரிப்பாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. முன்பு ஜாப் ஒர்க் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களுக்கு வரி கிடையாது. மூலப் பொருட்களை வாங்கி, உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். ஆனால், ஜிஎஸ்டி-யில் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்துக்கு கீழ் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், பெரு நிறுவனங்களின் கெடுபிடியால் 100 சதவீத நிறுவனங்களுமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளன. 

அதிக வரி விதிப்பு காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் 30 சதவீதத்துக்கும்மேல் உற்பத்தி குறைந்துவிட்டது. ஏற்கெனவே மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஜாப் ஆர்டர்கள் குறைவு ஆகியவற்றால் தள்ளாட்டத்துக்கு உள்ளாகியுள்ள சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள், தற்போதும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த நிலை தொடருமானால் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்: விவசாயத்தின் முதுகெலும்பு மோட்டார் பம்ப்செட்கள். முன்பு அதிகபட்சமாக 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி-ல் மோட்டார் பம்ப்செட் உதிரிப்பாகங்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விற்பனைக்கு 12 சதவீதம் மட்டும் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே கூலி அடிப்படையிலான நிறுவனங்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது தற்போதுதான் முதல் முறையாகும்.

தொழில் நெருக்கடி காரணமாக ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 60 சதவீதம் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. சுமார் 1000 நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 5 சதவீதமாக வரியைக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மேலும், வரித் துறையினரின் கெடுபிடிகளாலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். நிலைமை விபரீதமாவதற்குள் வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அழியும் குறுந்தொழில்

கோவை சிறு, குறு பவுண்டரி அதிபர்கள் சங்கத் தலைவர் .சிவசண்முக குமார்: கோவையில் 400-க்கும் மேற்பட்ட வார்ப்படத் தொழிற்சாலைகள் மூலம் நேரடியாக ஒரு லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். முன்பு 5 சதவீத வாட் வரி இருந்த நிலையில், 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது, சிறு, குறு வார்ப்படத் தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பெரு நிறுவனங்களின் முற்றுரிமை அதிகரித்து, சிறு, குறுந் தொழிற்சாலைகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே, முன்புபோல வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

பல்வேறு பொருட்களுக்கு மத்திய அரசு வரியைக் குறைத்துள்ள நிலையில், சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கும் வரியைக் குறைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து சிறு தொழில்முனைவோரைப் பாதுகாக்க வேண்டுமென்பதே கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிறிய தொழில்முனைவோரின் எதிர் பார்ப்பு.

- ஆர்.கிருஷ்ணகுமார்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close