[X] Close

வைகை அணை நீர்மட்டத்தின் மேலடுக்கில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதந்த மீன்கள்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 10:30 am
  • அ+ அ-

அதிக வெப்ப நிலையில் லேசான சாரல் பெய்ததால், வைகை அணை நீர்மட்ட மேலடுக்கில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அப்பரப்பில் வசித்த கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்கள் செத்து மிதந்தன.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் நேற்று 28 அடி நீர்மட்டம் இருந்தது. இதில் 15 அடி வரை வண்டல் படிந்துள்ளதால் குறைந்த அளவே தண்ணீர் தேங்கி உள்ளது. கோடை முடிந்தும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அணை நீரின் வெப்ப நிலையும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று ஏராளமான மீன்கள் நீர்தேக்கத்தின் பல பகுதிகளிலும் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியது: வெயில் அதிகமாக இருந்து லேசான சாரல் பெய்வது மீன்களுக்கு உகந்தது அல்ல. இதனால் நீரின் மேலடுக்கு வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அந்த அடுக்கில் உள்ள மீன்களுக்கு பிராணவாயு உரிய அளவு கிடைக் காமல் அவை இறந்துவிடும்.

மேலடுக்கில் பெரும்பாலும் கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்களே அதிகம் வசிக்கும்.

நடு அடுக்கில் ரோகு, மிருகால் உள்ளிட்ட மீன்களும், கீழ் அடுக்கில் ஜிலேபி கெண்டை மீன்களும் இருக்கும். அந்த மீன்கள் இந்த பருவ மாற்றத்தில் தப்பிவிடும். மீன்கள் வாயில் நீரை எடுத்து செவுள் மூலம் காற்றை பிரிக்கிறது. அதனால் இந்த மாற்றத்தை அந்த மீன்களின் சுவாச மண்டலம் ஏற்றுக் கொள்ளாது. அதிக வெப்பநிலையில் பலத்த மழை பெய்தால், இதுபோன்ற ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது. இலேசான சாரலால் நீரின் மேற்பரப்பில் தட்பவெப்பம் மாறியது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close