[X] Close
 

தமிழகத்தின் உயர்ந்த அணையான சோலையாறு நிரம்பியது 


solaiyaru-dam

முழு கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சி அளிக்கும் சோலையாறு அணை

  • kamadenu
  • Posted: 02 Jul, 2018 18:10 pm
  • அ+ அ-

தென்மேற்கு பருவமழையால் நிரம்பிய சோலையாறு அணையின் உபரிநீர் சேடல் டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. சோலையாறு நீர்மின் உற்பத்தி நிலையம்-2 ல் மின்உற்பத்தியும் தொடங்கியது. பிஏபி திட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு 70 அங்குலம் மழைப்பொழிவு காணப்படும். ஆனைமலை மலைப்பகுதியில், மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைத் தடுத்து சமவெளியில் பாயும் இரு ஆறுகளுடன் இணைத்து கிழக்கு நோக்கி திரும்பி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உருவாக்கப்பட்டதுதான் பிஏபி திட்டம்.

இதற்காக மலைப்பகுதியில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளும், மின் உற்பத்திக்காக காடம்பாறை, அப்பர்ஆழியாறு அணைகளும், சமவெளியில் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகளும் கட்டப்பட்டன. இந்த திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணை வால்பாறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆசியாவிலேயே 2-வது ஆழமான அணையாகும். இதன் நீளம் 4082 அடியாகும். 2 சதுர மைல் பரப்பளவுக்கு நீர்பரப்பு கொண்ட இந்த அணையில் 5.42 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். பருவமழை காலங்களில் சோலையாறு அணை நிரம்பியதும், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். 

கடந்த 3 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் எதிர்பார்த்த அளவு மழைப் பொழிவு இல்லாததால், பிஏபி திட்டத்தில் உள்ள அணைகள் எதுவும் நிரம்பவில்லை. 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் கடும் வறட்சியால் 4 அடியாக சரிந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் சோலையாறு அணையிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு...

இந்தாண்டு கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழையால், மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு அணைப்பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு காணப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து. மேல்நீராறு மற்றும் கீழ்நீராறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் சோலையாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. கடந்த இரு தினங்களாக வால்பாறையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று அதிகாலை 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1811 கன அடியாகவும், நீர்வெளியேற்றம் விநாடிக்கு 1044 கன அடியாகவும் இருந்தது. உபரி நீர் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 164 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும்.

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழையால் இந்தாண்டு பிஏபி பாசனத் திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, பாசனத்துக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால், <DP>விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, ‘நேற்று அதிகாலை சோலையாறு அணை நிரம்பியது. உபரி நீர் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளத்துக்கு செல்கிறது. தமிழக - கேரள ஒப்பந்தப்படி 2018-19-ம் நீர் ஆண்டில் ஜூலை 1-ம் தேதி முதல் கேரளா சோலையாறுக்கு தண்ணீர் தர வேண்டும். அதற்காக நீர் மின் உற்பத்தி நிலையம்-2 இயக்கப்பட்டு அவ்வழியாக கேரளா சோலையாறுக்கு தண்ணீர் செல்கிறது’ என்றனர்.

-  எஸ்.கோபு

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close