[X] Close

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் வங்கிகளில் பணம் திருடும் வட மாநில கும்பல்: பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை


police-warning-bank-frauds

  • kamadenu
  • Posted: 02 Jul, 2018 18:06 pm
  • அ+ அ-

கிரெடிட், டெபிட் கார்டுகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் சமீபகாலமாக மோசடி செயல்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க சைபர் கிரைம் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்தபோதிலும், பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவது அவசியம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வங்கிகளில் பணப் பரிமாற்றம், வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் கொள்முதல், பெட்ரோல் பங்க்கில் டீசல், பெட்ரோல் நிரப்புதல் உட்பட பல்வேறு வகையிலான பணப் பரிவர்த்தனையை டிஜிட்டலில் மேற்கொள்வது கணிசமாக உயர்ந்துள்ளது.

இதை சாதமாக பயன்படுத்தி மோசடி கும்பல்கள் நூதன முறையில் பணத்திருட்டில் ஈடுபடுகின்றன. இவர்கள், தனிநபர் குறித்த தகவல்களை மொபைல்போன் எண்ணை வைத்து திரட்டுகின்றனர். மேலும், வங்கி அல்லது இன்சூரன்ஸ் அதிகாரி என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு டெபிட், கிரெடிட் கார்டுகளின் ரகசிய எண்ணை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர்.

பணப் பரிமாற்றம் தொடர்பாக மொபைல்போன் குறுந்தகவல் மூலமோ, அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் வந்த பின்புதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பலர் உணர்கின்றனர். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோர் பெரும்பாலும், வெளிமாநிலத்தினர் என்பதால் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுப்பது போலீஸாருக்கு சவாலாக உள்ளது.

மேலும், அதிக தொகை தொடர்பான புகார்களுக்கு மட்டுமே போலீஸார் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், குறைவான பணம் மோசடி குறித்து கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ரூ.49 ஆயிரம் மோசடி

மதுரையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் குமரேசன் கூறியது:

மதுரை விமான நிலையம் அருகே பிரபல தனியார் நிறுவனத்துக்கு மூன்று வேளை உணவு சப்ளைக்கு ஆன்லைன் டெண்டர் பற்றி கடந்த வாரம் எனது செல்போனில் ஒருவர் பேசினார். இது தொடர்பாக அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு ஏடிஎம் டெபாசிட் மிஷின் மூலம் ரூ.49 ஆயிரம் செலுத்தினேன். 1 மணி நேரத்துக்குப் பின் பேசுமாறு அவர் கூறினார். அதன்படி, அவரை தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் தெரிவித்தேன். இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு மணி நேரத்துக்குள் வந்திருந்தால், பணப் பரிமாற்றத்தை தடுத்திருக்கலாம் என போலீஸார் கூறினர்.

என்னிடம் பணம் பெற்ற நபரின் மொபைல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. ரூ.49 ஆயிரம் மோசடிக்காக ராஜஸ்தான் வரை சென்று விசாரிப்பது சிரமம் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, புகார் அளிப்பதைத் தவிர்த்தேன் என்றார்.

வடமாநில கும்பல்

பண மோசடியை தவிர்ப்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இதுபோன்ற பண மோசடியை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவது மிகவும் அவசியம். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்களில் தங்களின் சொந்த தகவல்களை யாரும் பதிவிடக்கூடாது. குறிப்பாக கல்லூரி மாணவியர், வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களது புகைப்படங்களை வெளியிடக் கூடாது.

வங்கிக் கணக்கு, இன்சூரன்ஸ், டெபிட், கிரெடிட் கார்டு குறித்த தகவலை மொபைல்போன் மூலம் யார் கேட்டாலும் தெரிவிக்கக் கூடாது. டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்யும்போதும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போதும் அருகிலுள்ள நபருக்கு தெரியாமல் ரகசிய எண்களை குறிப்பிட வேண்டும்.

இது போன்ற மோசடிகளில் வடமாநில கும்பல்களே அதிக அளவில் ஈடுபடுகின்றன. வங்கி ஏடிஎம்களில் ‘ஸ்கிம்மர்’ கருவியை பொருத்தி வாடிக்கையாளரின் ஏடிஎம் கார்டு தகவலை திருடி பணம் எடுக்கின்றனர். 

ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கப்படும் முதல் வாரத்தில் இது போன்ற மோசடிகள் அதிக அளவில் நடக்கின் றன.

கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை அறிந்து ஆன்லைனில் பொருட்கள் கொள்முதல் செய்யும் மோசடி குறித்து 1 அல்லது 2 மணி நேரத்துக்குள் காவல் துறையினரை அணுகி புகார் தெரிவித்தால், உடனடியாக பணப் பரிமாற்றத்தை தடுத்துவிட முடியும்.

கடந்த வாரம் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் கிரெடிட் கார்டு மோசடி புகார் தொடர்பாக வந்த புகாரை விசாரித்து, ரூ.81 ஆயிரத்தை மீட்டுக் கொடுத்தனர் என்றார்.

-  என். சன்னாசி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close