[X] Close

நக்கீரன் கோபால் மீதான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:50 am
  • அ+ அ-

ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட விவகாரத்தில் நக்கீரன்கோபால் மீதான எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மற்றும் நக்கீரன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என 35 பேர் மீது சென்னை ஜாம்பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த ஜூன் 10-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நக்கீரன் கோபால் உள்ளிட்டோருக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் நக்கீரன் கோபால் உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவில், ‘நக்கீரன் கோபால் உள்ளிட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கப்படுகிறது. அத்துடன் உயர் நீதிமன்றம் மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த குற்றவியல் வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. தமிழக அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கும், வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடைவிதித்தனர். மேலும் இது தொடர்பாக நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close