[X] Close

பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் காரில் கஞ்சா கடத்திய 2 பேரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீஸார்


2

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:52 am
  • அ+ அ-

பெரம்பலூர் அருகே திருமாந்துறையில், ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்வதற்காக காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞர்களை துப்பாக்கி சூடு நடத்தி போலீஸார் பிடித்தனர்.

மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் முனியசாமி(29). ராமநாதபுரம் மாவட்டம் எருமைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீரமிட்டான் மகன் வழிவிடுமுருகன்(19). இவர்கள் இருவரும் ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக மதுரை மாநகர சிறப்புப் படை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல்துறையினரைக் கொண்ட 2 குழுக்களை அமைத்து திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியிலும், பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியிலும் அதிரடி வாகனச் சோதனை நடத்துமாறு அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, திருமாந்துறையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் செல்வன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சிவப்பு நிற கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. ரகசிய தகவலில் தெரிவிக்கப்பட்டதுபோல கார் உள்ளே 2 பேர் இருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார், மற்றொரு காரில் ஏறி அந்தக் காரை விரட்டிப் பிடிக்க முயன்றனர்.

ஒருகட்டத்தில் அந்தக் காரை நெருங்கிய நிலையில், போலீஸார் அந்தக் காரை முந்த முயன்றபோது மர்ம நபர்கள் காரை வேகமாக ஓட்டியதுடன், போலீஸாரின் கார் மீது அவர்களின் காரை மோதிவிட்டு விரைந்து சென்றனர்.

இதையடுத்து, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சூடு சப்தத்தைக் கேட்டவுடன் முன்னால் சென்ற காரில் இருந்த இருவரும் காரை நிறுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது, போலீஸார் விரைந்து செயல்பட்டு துப்பாக்கி முனையில் இருவரையும் பிடித்தனர். பின்னர், காரையும் பறிமுதல் செய்துகொண்டு மங்களமேடு காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு, பிடிபட்ட இருவரிடமும் விசாரித்தபோது, கஞ்சா கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காரில் சோதனையிட்டபோது 150 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், மங்களமேடு காவல் நிலையத்துக்கு வந்த திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி திஷாமித்தல், டிஎஸ்பி தேவராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், "காரில் கஞ்சா கடத்த முயன்ற முனியசாமி, வழிவிடுமுருகன் ஆகியோர் மீது மதுரையில் பல வழக்குகள் உள்ளன. முனியசாமி, அண்மையில் வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதாகி, ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தவர். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்தவர் தற்போது கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார்" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close