[X] Close

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழாநிலைக்கோட்டையில் பீரங்கி கல் குண்டுகள் கண்டெடுப்பு: தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:53 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழாநிலைக்கோட்டையில் பீரங்கி வைக்கப்பட்டுள்ள கொத்தளத்தின் தரைப் பகுதியில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

கீழாநிலையில் 1683-ம் ஆண்டுவாக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, கோட்டையைக் கட்டியதாக 1813-ல் தயாரிக்கப்பட்ட புதுக்கோட்டை கணக்காய்வுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இப்பகுதி கீழாநிலைக்கோட்டையாக மாறியது.

இக்கோட்டை ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசுகளின் பொறுப்பில் மாறிமாறி இருந்து வந்துள்ளது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டை, செங்கல் மற்றும் செம்புறாங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

தற்போது இக்கோட்டை, பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கோட்டை வளாகத்தில் உள்ள அரியநாயகி அம்மன், ஆஞ்சனேயர் கோயில் அருகே கோட்டை மீது 1 பீரங்கி மட்டும் கடந்த கால வரலாறுகளை நினைவூட்டும் விதமாக தற்போது உள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் தமிழக சுற்றுலாத் துறையின் நிதியில் இருந்து மின் விளக்குகள் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பீரங்கி உள்ள கோட்டைச் சுவருக்கான படிக்கட்டின் அடிப்பகுதியில் மின் கம்பம் நடுவதற்காக கான்கிரீட் தூண் அமைப்பதற்காக 2 தினங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டுள்ளது. அப்போது, கல்லால் ஆன ஏராளமான குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில், சுமார் 10 குண்டுகள் மட்டும் அப்பகுதியில் கிடக்கின்றன.

இதையடுத்து, இந்தக் குண்டுகளையும், எஞ்சியுள்ள கோட்டையையும் தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆர்வலர் சுப.முத்தழகன் கூறியது: 19-ம் நூற்றாண்டு வரை போர் வீரர்களின் பாசறையாக விளங்கிய இக்கோட்டையில், சில தினங்களுக்கு முன்பு 5 அடி ஆழத்தில் இந்த கல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. படைக் களமாக விளங்கிய 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோட்டையில் போரின்போது இதுபோன்ற குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எதிர்த்து போரிடுவோர் மீது இந்த குண்டுகளை எறிவதற்காக பிரத்யேகமான பீரங்கி போன்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது.

தற்போது குண்டுகள் எடுக்கப்பட்ட இடத்தில் இன்னும் ஏராளமான குண்டுகள் இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் துறையினர் இங்கு ஆய்வு செய்து இத்தகைய குண்டுகளைச் சேகரித்துப் பாதுகாப்பதுடன் இவ்விடத்தை அகழாய்வு செய்து, இக்கோட்டையின் வரலாறை சமகால மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close