[X] Close

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: ஆயிரக்கணக்கானோர் தரிசிக்க முடியாமல் திரும்பினர்


2

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:51 am
  • அ+ அ-

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவதரதர் திருவிழாகோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையில் செல்ல முடியாத அளவுக்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளாக குளத்தில் இருந்த அத்திவதரதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை தரிசிப்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அத்திவரதர் நேற்று பச்சை பட்டாடையில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் தரிசித்துச் சென்றனர்.

நேற்று சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாள் என்பதால் சுமார் 2 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர். இதனால் வரதராஜப் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தன. வடக்கு மாடவீதியில் அத்திவரதரை தரிசிக்க செல்லும் வரிசையை பிடிக்க பொதுமக்கள் மத்தியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். மயங்கி விழுந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் திரண்டதால் அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பிச் சென்றனர். பலர் மதுரை, திருச்செங்கோடு, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிவித்தனர். வேலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது 40 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அத்திவரதரை வெளியில் எடுக்கின்றனர். அடுத்த 40 ஆண்டுகள் கழித்து எடுக்கும்போது நான் உயிருடன் இருப்பேனா எனத் தெரியவில்லை. அதனால் இப்போது பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். காலையில் 5 மணிக்கே வரிசையில் நிற்க முயன்றேன். அதிக கூட்டம் காரணமாக முடியவில்லை. அருகில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கிவிட்டு இப்போது நண்பகல் 12 மணிக்கு வந்துள்ளேன். இப்போதும் உள்ளே நுழைய முடியவில்லை என்றார். இதுபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசலில் உள்ளே செல்ல முடியாமல் திரும்பினர்.

40 ஆண்டுகள் கழித்து நடைபெறும் ஒரு விழாவில் பக்தர்களின் ஏமாற்றத்தை தடுக்க மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திவரதரை 24 மணி நேரமும் தரிசிக்கும் வகையில் நேரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாச்சாரியார்களிடம் கலந்து பேசிஅத்திவரதருக்கு புதிய அலங்காரம் செய்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி மற்ற நேரங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

அத்திவரதர் தரிசனத்துக்காக வார இறுதி நாட்களில் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் பக்தர்களும், மற்ற நாட்களில் 20 ஆயிரம் மக்களும் வருவார்கள் என்று திட்டமிடப்பட்டே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கழிப்பறைகளையும், குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். வரிசையில் நிற்கும் மக்கள் அதைவிட்டு வெளியே வர முடியாது. இதனால்அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று குடிநீர் வழங்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். வரிசைக்காக கட்டப்படும் தடுப்புக் கட்டைகளின் தூரத்தை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close