[X] Close

வறட்சிக்குள்ளாகும் மாவட்டங்களில் ரூ.85 கோடியில் 8,569 பண்ணை குட்டைகள்: வேளாண் துறை திட்டம்


85-8-569

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:45 am
  • அ+ அ-

டெல்டா உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் நீரை சேமித்து வைக்க இந்த ஆண்டில் ரூ.85 கோடியில் 8,569 பண்ணைக் குட்டைகளை அமைக்க வேளாண்துறை திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 4 சதவீதத்தை கொண்டிருக்கும் 10-வது பெரிய மாநிலம் தமிழகம்.

இருந்தாலும், நீர் வள ஆதாரங்களை 3 சதவீதம் மட்டுமே கொண்டிருப்பதால், நீர்ப்பற்றாக்குறை மாநிலமாக இருந்து வருகிறது. குறிப்பாக பருவகால மாற்றத்தால் அதிக அளவில் பாதிக்கப்படும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. நாட்டின் சராசரி மழை அளவான 120 செ.மீட்டருடன் ஒப்பிடும்போது, தமிழக சராசரி மழை அளவு 92.1 செ.மீ. ஆகும். இதனால், ஓராண்டு மழை பொய்த்தாலும் வறட்சி ஏற்பட்டு விடுகிறது. எனவே, விவசாய நிலங்களின் தாழ்வான பகுதிகளில் அதிகப்படியான மேற்பரப்பு நீரை சேமிக்கவும், வறட்சி காலங்களில் அந்த நீரை பயன்படுத்தவும் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு வேளாண்துறை முக்கியத்துவம் அளித்து வருகிறது.

குறிப்பாக அதிக பாசன பரப்பைக் கொண்டுள்ள காவிரி டெல்டா,கடலோர பகுதிகள் மற்றும் வறட்சிக்குள்ளாகும் மாவட்டங்களில் நிலையான வேளாண்மைக்கு பண்மைக் குட்டைகள் அமைக்கப்படுவது அவசியமாகிறது. இதை கருத்தில்கொண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களில் 2018-19 மற்றும் 2019-20-ம்ஆண்டுகளில் முழுமையான மானியத்துடன் 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகளை ரூ.100 கோடியில் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டப்படி கடந்த ஆண்டு ரூ.17 கோடியே 98 லட்சத்தில், 1,938 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த ஆண்டில் 8,202 பண்ணைக் குட்டைகளை ரூ.82 கோடியே 2 லட்சத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீனமாக்கல் திட்டத்தின் கீ்ழும் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், 2024-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கு, பல துறைகளின் ஒருங்கிணைப்புடன் பாசன பகுதிகளில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வேளாண் பொறியியல் துறை மூலம் 66 உப வடிநில பகுதிகளி்ல ரூ.15 கோடியே 12 லட்சத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படுகிறது.

முதல்கட்டமாக 14 உபவடி நிலப்பகுதியில் ரூ.2 கோடியே 98 லட்சத்தில் 521 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக இந்த ஆண்டு ரூ.2 கோடியே75 லட்சத்தில் 16 உப வடிநிலப்பகுதிகளில் 367 பண்ணைக்குட்டைகள் அமைக்க வேளாண் துறை உத்தேசித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close