[X] Close

அங்கன்வாடி மழலையர் பள்ளிகளில் பணிபுரிவது கவுரவக் குறைச்சலா?- ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:35 am
  • அ+ அ-

அங்கன்வாடி மழலையர் பள்ளிகளில் பணிபுரிவது கவுரவக்குறைச்சலா என ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் (எல்கேஜி மற்றும் யுகேஜி) தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் 52,933 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்த, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள 5,934 இடைநிலை ஆசிரியர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் 1,979 ஆசிரியர்களையும் நியமித்து தமிழக கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியை ஒருவர், அதே பள்ளியி்ல் உள்ள அங்கன்வாடி மழலையர் பள்ளிக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.பார்த்திபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘உபரி ஆசிரியர்களை மட்டுமே மழலையர் பள்ளிக்கு நியமிக்கப்போவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் தங்களை மழலையர் பள்ளிகளுக்கு நியமித்து இருப்பது சட்டவிரோதம்’ என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்களை இடமாற்றம் செய்ய காலஅவகாசம் தேவை என்பதால் தற்காலிகமாக அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் சம்பளமோ மற்றும் இதர பலன்களுக்கோ எந்த பாதிப்பும் வராது’ என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ‘‘ஏழை, எளிய மக்களும் தங்களது குழந்தைகளை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு அங்கன்வாடி மழலையர் வகுப்புகளை புதிதாக தொடங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள், மழலையர் பள்ளிகளில் பணியாற்றுவது கவுரவக்குறைச்சலா என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தான் விளக்க வேண்டும். அண்மைக்காலமாக ஆசிரியர்கள் எதற்கு எடுத்தாலும் வழக்கு தொடுக்கின்றனர்.

இடமாறுதலில் ஆரம்பித்து அரசு மாணவர்களின் நலன் கருதி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர்த்துக்கொண்டே இருப்பது ஆரோக்கியமானதல்ல. எனவே இந்த வழக்கைப் பொருத்தமட்டில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது பணியை ஏற்க வேண்டும். அதுபோல அரசும் மழலையர் பள்ளிகளுக்கு நிரந்தரமாக நியமிக்கப்படவுள்ள உபரி ஆசிரியர்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23-க்கு தள்ளி வைத்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close